மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

துணைவேந்தர் ஊழல்:சிபிஐ விசாரணை தேவை!

துணைவேந்தர் ஊழல்:சிபிஐ விசாரணை தேவை!

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரியில் திமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் இல்லத் திருமணம் இன்று(பிப்ரவரி 5) நடைபெற்றது. இதில், திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, “டெல்லியில் உள்ள இல்லங்களில் அந்தந்த மாநிலங்களின் அடையாளமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மட்டும் தமிழக அரசு நீக்கிவிட்டு பொதிகை இல்லம், வைகை இல்லம் எனப் பெயர் சூட்டியுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. மத்தியில் உள்ள மோடி ஆட்சிக்குத் துதிபாடக்கூடிய, கை கட்டி அடிமையாக இருக்கக்கூடிய நிலையில் தமிழக அரசு உள்ளதால்தான் இந்த ஆணை வந்துள்ளது. உடனடியாக அந்த நிலையில் இருந்து தமிழக அரசு மாறவேண்டும். தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றினால் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்” என எச்சரித்தார்.

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவியைப் பெற முடியும் என செல்லூர் ராஜு கூறியது குறித்துப் பேசிய அவர், “கலைஞர் ஆட்சியைப் பிடிக்கும் நேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, ’நான் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்வேன்’ என்று அறிவித்தார். அதே போல ஆட்சிக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் பதவி ஏற்றபோது கோப்புகளை அங்கேயே வரவழைத்து 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தார்.

அப்போது நாங்கள் எல்லாம் அவரிடம் ஒன்றை எடுத்துச்சொன்னோம். ‘ரூ.1 கோடி அல்ல, 2 கோடி அல்ல, 100 கோடி அல்ல, 500 கோடி அல்ல, 7 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறீர்கள்; இதில் அதிகமாகப் பயன் பெறுபவர்கள் அதிமுககாரர்கள்தான்; இது நியாயமா’ என்று கேட்டோம்.

அதற்கு அவர் ‘கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைவரையும் தமிழக விவசாயிகளாகத்தான் பார்க்கிறேன்’ என்று கூறினார். அவர்களை அதிமுகவினராகவோ, காங்கிரஸ்காரர்களாகவோ, திமுககாரர்களாகவோ, கம்யூனிஸ்ட்காரர்களாகவோ பார்க்கவில்லை என்று கூறினார்.

இப்போது தெர்மாகோல் ராஜு கூறியதை எண்ணிப் பார்த்து மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் ஆட்சி இது. மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அத்தகைய நலத்திட்ட உதவிகள் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதேபோல், துணைவேந்தரைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது எனக் குற்றஞ்சாட்டிய அவர் , “ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார், இன்றைக்கு லஞ்ச ஊழல்கள் கொண்ட ஆட்சி நடக்கிறது. இவர்கள் வாங்கக்கூடிய லஞ்சத்தில் மந்திரிகளுக்கும் பங்கு போகிறது. அந்தப் பங்கு சரியாகப் போகவில்லை என்ற காரணத்தினால்தான் லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவிவிட்டு துணைவேந்தரைக் கைது செய்திருக்கிறார்கள்.

துணைவேந்தர் கைது விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த ஆட்சி மாதக்கணக்கில் அல்ல, நாள் கணக்கிலேயே மாற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வரும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த விவகாரங்களை எடுத்துக் கண்டுபிடித்து, ஊழல்களில் யார் யார் ஈடுபட்டார்களோ அவர்களைக் கண்டறிந்து சிறைக்கு அனுப்புவதுதான் முதல் வேலை. ஊழல் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள், நண்பர்கள் ,பேரம் பேசியவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து சிறைக்கு அனுப்புவோம்” என்று தெரிவித்தார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 5 பிப் 2018