பாகிஸ்தான் தாக்குதல்: 4 இந்திய வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தொடர் தாக்குதலால் அங்குள்ள 84 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களையும் ராணுவ நிலைகளையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவருவதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்திய எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானின் ராணுவத் தாக்குதல் தொடர்வதால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பதற்றமாகவே காணப்படுகிறது.
4 வீரர்கள் வீரமரணம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று (பிப்ரவரி 4) மாலை திடீரென பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் தங்கியிருந்த நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கபில் குண்டு என்ற ராணுவ அதிகாரி உட்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுமியும், இந்திய வீரர் ஒருவரும் காயமடைந்தனர். இந்நிலையில் தற்போது 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
84 பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தத் தொடர் தாக்குதலால் ராஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுமார் 84 பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து 0-5 கி.மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.