மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

தமிழகத்தை அழிக்கப் போட்டி!

தமிழகத்தை அழிக்கப் போட்டி!

காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று, பிரதமர் மோடியைச் சந்திப்பதே தீர்வாக அமையும். இதனைச் செய்ய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

காவிரியில் திறந்துவிடப்படும் நீரை நம்பியே, டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர் சாகுபடி நடைபெறுமென்ற நிலை உள்ளது. ஆனாலும், கர்நாடகா அரசு காவிரியில் நீர் திறந்துவிடமுடியாது என பிடிவாதம் காட்டி வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் கட்சியும் எதிர்கட்சியான பாஜகவும் இந்த விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டுடன் உள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 3) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 4) திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். அப்போது, கர்நாடக அணைகளில் தேவையான தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு நீர் தர மறுப்பதாகவும், மத்திய அரசும் கர்நாடக மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தை அழிக்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரிலுள்ள சம்பா பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது. ஆனாலும், அனைத்து கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது. அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச்சென்று பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து, அவருக்கு அரசியல் நெருக்கடி கொடுப்பது மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும்.

காவிரியில் நீர் தரமாட்டோம் என்று அறிக்கை வெளியிட்ட கர்நாடகா அமைச்சர்கள், தமிழக – கர்நாடகா முதலமைச்சர்கள் சந்திப்பு குறித்து எந்தப் பதிலும் சொல்லவில்லை. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

ஓஎன்ஜி சிக்கு எதிரான போராட்டம் டெல்டா மாவட்டங்களில் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அதன் விழாவில் திமுக எம்எல்ஏ கலந்துகொண்டுள்ளார். எனவே, ஓஎன்ஜிசி போராட்டம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

அவசர நடவடிக்கையாக, அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018