மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

அமைச்சரைக் கைது செய்ய வேண்டும்!

அமைச்சரைக் கைது செய்ய வேண்டும்!

பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், அனைத்துக்கும் மூலமாக இருப்பது உயர்கல்வித்துறை அமைச்சர்கள் தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக, அதன் துணை வேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.30 லட்சம் கையூட்டு வாங்கும்போது, அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மேலும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். துணைவேந்தர் கணபதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த ஊழலுக்குத் தரகராகச் செயல்பட்டதாக வேதியியல் பேராசிரியர் தர்மராஜ், தொலைதூரக்கல்வி இயக்குனர் மதிவாணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சுவர்ணலதா ஆகியோர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பேராசிரியர் நியமன ஊழல் தொடர்பாக அதிகாரப் படிநிலையின் உச்சத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து, அவர் இன்று (பிப்ரவரி 5) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி பணி நீக்கமோ அல்லது பணியிடை நீக்கமோ செய்யப்படவில்லை என்றும், அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்று விதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக, வழக்கு எந்த திசையில் பயணிக்கும் என்பது குறித்த எதிர்மறையான யூகங்களே உண்டாவதாகவும் கூறியுள்ளார்.

”பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக 2016ஆம் ஆண்டில் அப்போதைய உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனுக்கு ரூ.8 கோடி கொடுத்ததாக கணபதி கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி, பேராசிரியர்கள் பணி நியமனத்தில் கையூட்டாக வாங்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை இப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும், இன்னொரு பகுதியை தேர்வுக்குழுவில் அரசாங்கப் பிரதிநிதியாக இடம்பெற்றிருந்த பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனுக்கும் கொடுத்ததாகக் கூறியதாகத் தெரிகிறது.

ஆனால், இந்தக் தகவல்களின் அடிப்படையில் கையூட்டுத் தடுப்புப்பிரிவினர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அமைச்சர் அன்பழகனையும், எடப்பாடி ஆசி பெற்ற முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழக நியமன ஊழல் என்பது புதிதாக முளைத்த விஷயமல்ல. 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது தான். இந்த ஊழலில் முழுப்பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வந்து, அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பது தான் உயர்கல்வித்துறையை தூய்மைப்படுத்த உதவும். மாறாக பல்கலைக்கழக ஊழலில் சுண்டெலிகளை பிடித்துவிட்டு, பெருச்சாளிகளை மிகவும் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது புதுப்புது வடிவங்களில் ஊழல்கள் தலையெடுத்து தழைத்தோங்கவே உதவும்.

பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. அனைத்துக்கும் மூலமாக இருப்பதும், இருந்ததும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் தான். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக ஊழல்களைக் களைய முடியாது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018