மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மணல் குவாரி : உச்ச நீதிமன்றம் புது உத்தரவு!

மணல் குவாரி : உச்ச நீதிமன்றம் புது உத்தரவு!

மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவு

மலேசியாவிலிருந்து தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி தனி நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மலேசிய மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், மணல் தட்டுப்பாட்டை போக்கத் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அரசு சார்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்ததுடன், மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றம் செல்ல வலியுறுத்தல்

மணல் குவாரிகளின் மீதான தடைக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளதாக, அந்தச் சங்கத்தின் தலைவர் செல்ல. ராசாமணி கூறினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு

மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு வழக்கு இன்று (பிப்ரவரி 5) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018