செம்மரக் கடத்தல்: மருத்துவ மாணவர் கைது!

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாகக் கூறி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜீத் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துவருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாகக் கூடுதலாக, பகுதி நேர கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று ஓட்டுநராக ஆந்திர மாநிலம் கரக்கம்பட்டி சாலையில் சென்றுள்ளார். செம்மரம் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து அவ்வழியில் அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரை ஓட்டி வந்த அஜீத்தையும் அவருடன் காரில் வந்த கர்நாடகாவைச் சேர்ந்த ஏசு என்பவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதையடுத்து மங்களம், ரங்கம்பேட்டை பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி இருவரையும் கைது செய்துள்ளனர்.
செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மருத்துவக் கல்லூரி மாணவரான தான் பகுதி நேர ஓட்டுநராகப் பணிபுரிவதாகக் கூறியும், போலீசார் விடுவிக்கவில்லை. அப்போது அங்கே வந்த செய்தியாளர்களையும் போலீசார் விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே அங்கு சென்ற திருப்பதி காவல் ஆய்வாளர் முரளியிடம், செம்மரக்கட்டைக் கடத்தல் கும்பலைப் பிடிக்காமல், அஜீத்தை பிடித்ததற்கான காரணத்தைக் கேட்டதற்கு, அவர் விளக்கமளிக்க மறுத்துள்ளார்.