மத பேதத்தை உருவாக்க முயலும் பாஜக!

தமிழகத்தில் மத பேதத்தை உருவாக்க பாஜக முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள டிடிவி. தினகரன், “ஜெயலலிதா இருந்தவரைத் தமிழகத்தில் மதவாத சக்திகளை ஊடுருவாமல் பார்த்துக்கொண்டார்” என்று தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் என்ற பெயரில் டிடிவி. தினகரன் தஞ்சையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் நேற்று (பிப்ரவரி 4) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆளும்கட்சியையும், பிரதான எதிர்க்கட்சியையும் எதிர்த்து நான் வெற்றி பெற்றேன். தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் காத்திருக்கின்றனர். எப்போது தேர்தல் வந்தாலும் ஆட்சியை அமைத்து மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “தமிழகத்தில் மத பேதத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது”எனக் குற்றஞ்சாட்டிய அவர், “சிறுபான்மை மக்களின் மத சுதந்திரத்தில் தலையிட்டு அவர்களை அச்சுறுத்தும் வகையில் முத்தலாக் தடைச்சட்டம், ஹஜ் மானியம் ரத்து போன்றவற்றை அமல்படுத்துகின்றனர். ஜெயலலிதா இருந்தவரைத் தமிழகத்தில் மதவாத சக்திகளை ஊடுருவாமல் பார்த்துக்கொண்டார்” என்று தெரிவித்தார்.