மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: “கலர் மிட்டாய்”

சிறப்புக் கட்டுரை:  “கலர் மிட்டாய்”

-ஸ்ரீராம் சர்மா

“பசியால் வாடும் குடில்களைத் தேடித் தேடி உணவளித்துவருவதே எங்கள் திட்டம். எங்களால் முடிந்த வரையில் இதனைச் செய்வோம்...”

புகழ்பெற்ற சென்னை விவேகானந்தா கல்லூரியின் ரோட்டராக்ட் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி 2014ஆம் ஆண்டு முதல் ‘பசி தீர்ப்போம்’ என்னும் பெயரில் இந்த நல்ல காரியத்தை ஈடேற்றிவருகின்றார்கள். சமூக அக்கறையோடு செயல்படும் அந்த மாணவக் கூட்டத்தில் எனது மகனும் ஒருவன் என்பதில் எனக்கு நிம்மதி.

வாழ்த்துக்குரிய நமது இளைய சமுதாயத்தின் இந்த எண்ணத்துக்கு முன்னோடியானது 1982இல் எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் என்றாலும் அதற்கும் முன்னோடியாக விளங்குவது ஒன்று உண்டு.

காமராஜர் அவர்கள் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம்.

“எங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுக்குணவே கொடுக்க முடியாத நிலையில் செவிக்கு உணவு கொடு என்றால் எப்படித்தான் ஐயா முடியும் ? பஞ்சைப் பராரிகளாக மக்களை வாழ வைத்துக்கொண்டிருப்பது இந்த நாட்டின் அரசியல் கேடல்லவா? தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் உங்களைப் போன்றவர்களின் வேலைதான் என்ன? சொல்லுங்கள், உழைக்க மறுக்கும் மக்களா நாங்கள்?”

செவிட்டில் அறைந்தாற்போல கேட்கப்பட்ட இந்த வெகுஜனக் கேள்வி காமராஜரைச் சுட்டது. வறுமையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல், தன் மாமாவின் துணிக் கடையில் வேலை செய்தபடி, தட்டுத் தடுமாறி முன்னேறி வந்தவர் என்பதனால் காமராஜர் அவர்களின் உள்ளத்தை உலுக்கிவிட்டது.

அதனால்தான், 1955ஆம் ஆண்டு வாக்கில் தனது ஆட்சிக் காலத்தில் எட்டயபுரத்தில் சென்று நின்றுகொண்டு இப்படி ஓங்கிச் சொன்னார்...

“இந்த பாரத தேசத்து மக்களின் பசிப் பிணியைக் கண்டு, மனம் கசிந்து ‘சொல்லத் துடிக்குதடா நெஞ்சம் – வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்...’ என்று மனம் வெதும்பி வெடித்த மகாகவி பாரதியாரின் பேரான்மா நின்று குளிரட்டும்...”

ஆம், பெம்மான் பாரதியார் உதித்த அந்த எட்டயபுர மண்ணில் வைத்துத் தான் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் 1955ஆம் ஆண்டு தன் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார்.

காதடைத்து நின்ற பசிக் கொடுமையை காமராஜர் தீர்த்துவிட, கிடைத்த இடுக்குகளிலெல்லாம் கல்வி புகுந்துகொண்டுவிட அதனால் பயன் பெற்ற மாணவர்கள் எண்ணற்றோர்.

அதனால்தான், மகாபெரியவா என்று உலகத்தாரால் வணங்கிப் போற்றப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அன்று இவ்வாறு துணிந்து சொன்னார்...

“எத்தனையோ இன்னல்களை கடந்து வந்தபோதும், சதா சர்வ காலமும் நாட்டைப் பற்றியே சிந்திக்கும் உள்ளம் பெற்றவர் நமது காமராஜ். சகல தர்மங்களையும் – நீதிகளையும் நன்குணர்ந்தவர் காமராஜ். காமராஜ், மகா புருஷர்...”

“முக்காலம் உணர்ந்த முனி” என்று போற்றப்படும் காஞ்சி பெரியவர் வேறு யாரைப் பற்றியும் இவ்வாறு குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.

அதன் பிறகு எம்.ஜி.ஆர்.அவர்கள் சத்துணவுத் திட்டம் என்னும் பெயரில் அதனை விரிவுபடுத்தினார். என்றாலும், காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தில் ஒரு அர்த்தம் இருந்தது.

“மாணவர்களே, உங்களுக்குக் கல்வி அவசியம். கல்விக்குப் பின்னாலான உங்களது உழைப்பு என்பது, உங்கள் குடும்பத்துக்கும் இந்த நாட்டுக்கும் மிக மிக அவசியம். உங்கள் வயிற்றுப் பாட்டை நான் நன்றாகவே அறிவேன். நீங்கள் மட்டும் உழைத்துப் படிக்கத் தயாராக இருப்பீர்களேயானால், நீங்கள் பள்ளிக்கு வரும் நாட்களில் உங்களுக்குச் சோறிட நான் ஊர் ஊராகச் சென்று பிச்சை கேட்கவும் தயாராக இருக்கிறேன்...” என்றவர் காமராஜர்.

ஆனால், எம்.ஜி.ஆர் கொண்டு வந்த அந்த சத்துணவுத் திட்டம் வேறு ஒரு கோணத்தைக் கொண்டது.

“பள்ளிக்கு வரும் நாட்களில் சோறு போடுவீர்கள் சரி. வராத நாட்களில் பாவம் அவர்கள் என்னதான் செய்வார்கள்...? ஆகவே, எல்லா நாட்களிலும் சோறு போடுகிறேன்...” என்னும் கருணையின் பாற்பட்டுப் பிறந்ததே சத்துணவுத் திட்டம்.

ஆட்சியாளர்களுக்கு கண்டிப்புக் கலந்த அக்கறை மட்டுமே இருக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். கருணை புரிய அவர்கள் கடவுளர்கள் இல்லை அல்லவா...?

பின்னாட்களில், முட்டை போடுவோம். அதையும் இரண்டாகப் போடுவோம். கூடவே கொண்டைக் கடலை கொடுப்போம். வாழைப்பழம்கூடக் கொடுப்போம் என்றெல்லாம் கால மாற்றத்தில் மனம் போன போக்கில் அரசியல் ஸ்டண்ட் அடித்து அந்த உயர்ந்த நோக்கத்தைச் சிதறடித்துவிட்டார்கள்.

சட்டசபைக் குறிப்பேட்டில் இது குறித்த பல தமாஷ்களைக் காண முடிகிறது. “தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்னும் திருவள்ளுவப் பேராசானின் குறளெச்சறிக்கையைக் கொள்ளாத அவர்களை காலம் கணக்கில் கொள்ளாது. போகட்டும்.

விஷயத்துக்கு வருவோம்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்துக்கு முன்னோடி ஏதேனும் உண்டா...?

உண்டு.

அது, 1925இலேயே ஆரம்பித்து விட்டது. அதற்குப் பெயர் “மிட் டே மீல்ஸ்”.

அது மிகத் திறம்பட நிகழ்ந்தது சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் இந்து உயர் நிலைப் பள்ளியில்தான். காரணம், பொதுமக்களின் பங்கெடுப்பு. இந்து உயர் நிலைப்பள்ளியில் இதற்காகவே ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது.

1852இல் 18 மாணவர்களோடு ஆரம்பித்த இந்து உயர்நிலைப் பள்ளி, மிட் டே மீல்ஸ் உட்பட இன்று வரை கண்டிருக்கும் சாதனைகள் ஒன்றிரண்டு அல்ல.

கல்வி கேள்வியில் அன்று இந்து உயர் நிலைப் பள்ளி முன்னணியில் இருந்தது என்றால் அதற்குக் காரணமானவர்கள் நான்கு பெரியோர்கள். <

திரு. எம்.ஏ.சிங்கராச்சாரியார். திரு. எஸ். கேசவலு நாயுடு. திரு. பார்த்த சாரதி ஐயங்கார். திரு. சேஷாசல நாயுடு. இந்து உயர்நிலைப் பள்ளியின் உயர்வுக்காகத் தங்கள் கைக்காசை அள்ளி, அள்ளி இறைத்த வள்ளல்கள்.

நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்த பத்ம விபூஷண் பராசரன் போன்ற எண்ணற்ற ஞானாகிருதிகளை இந்த சமூகத்துக்கு ஈந்த பெருமையில் தன் மேனி சிவக்க இன்னமும் அந்த இந்து உயர்நிலைப் பள்ளி ஆங்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றது.

“ரெட் பில்டிங்கில் படித்தவன்...” என்பது திருவல்லிக்கேணி வாசிகளுக்கு ஒரு பெருமையாகவே இருக்கிறது. கட்டுரையின் சுவாரஸியத்துக்கு சொல்லப் போனால் கமல்ஹாசன்கூட இந்து உயர் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்தான்.

அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைவராக நம்மிடையே பழுத்து நிற்கும் திரு. வைத்தீஸ்வரன் அவர்களுக்கு இன்று வயது 79. ஆம், எழுபத்து ஒன்பது.

இந்து உயர் நிலைப் பள்ளியில் படித்த எண்ணிலடங்காத சாதனையாளர்கள் இன்று உலகமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களைக் குறித்துப் பேசும் போதெல்லாம் , வயதைக் கடந்ததொரு கம்பீரம் திரு. வைத்தீஸ்வரன் அவரது குரலில் கனிந்து தொனிக்கின்றது.

புகழ் பெற்ற அந்த இந்து உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்கள் என்னவென்ன தெரியுமா ?

1. திருக்குறள்

2. நைடதம்

3. நன்னூல் கண்டிகை

4. நிகண்டு

5. மேலதிகம் விரும்புவோருக்கு ஆங்கிலம்.

ஆம், அன்று சுத்தமான தமிழ் ஞானத்தை போதித்திருக்கின்றது இந்து உயர்நிலைப் பள்ளி. நானும்கூட அந்தப் பள்ளியில் படித்தவன்தான். ஏதோ என் பெற்றோர்கள் திருவல்லிக்கேணியில் வசித்து வாழ்ந்த காரணத்தால், எனக்கு அமைந்துவிட்ட வாய்ப்பு அது.

மற்றபடி, நானும் படித்தேன் என்று அந்தப் பள்ளியை இழுத்து வைத்துப் பேசுவதெல்லாம் அடியேனின் தமிழுக்கு அதிகம்தான். என்ன செய்ய..? நான் படிக்கப் போகும்போது நைடதம், நிகண்டு எல்லாம் அகற்றப்பட்டு அங்கே அசோகரின் மரத்தை நட்டுவிட்டார்கள்.

அறியாத என்னையும் ஆளாக்கி அனுப்பிய இந்து உயர்நிலைப் பள்ளியை எண்ணும்தோறும் என் மனம் நெகிழ்கிறது. அதனையும் கடந்து, கோபால சக்கரவர்த்தி என்னும் ஆசிரியரின் கீழ் வளர்ந்தேன் என்பதை என்னும் போது இன்றும்கூட என் கண்ணில் நீர் கசிகிறது. காரணம், என்னை அவர் வளர்த்த விதம்.

கோபால சக்ரவர்த்தி சார். ஆறடி உயரம், உச்சிக் குடுமி. அகன்ற நெற்றி. படர்ந்த திரு நாமம். அதை சட்டையென்றாலும் சரி, ஜிப்பா என்றாலும் சரி. பஞ்சகச்சம். அடர்ந்த புருவங்கள். அதன் கீழ் எந்த நேரமும் சிரித்தபடியே இருக்கும் கண்கள். நல்லன மட்டுமே பேசும் நறவு பூசிய நாவு.

“ஸ்ரீராமா, நீ கபடி ஆடும்போது மேலருந்து நான் பாத்துண்டிருந்தேன். அவ்வளோ மூர்க்கமா நீ ஆடக் கூடாதுடா. அவுட்டுன்னு ஆனப்புறம் விட்டுறணும்டா...”

“சார், அவன் எங்க டீம் நாகராஜையும், துலுக்கானத்தையும் எப்படி இழுத்துப் போட்டான் தெரியுமா..?”

“சரிடா, அதுக்குத்தான் நீ பதிலுக்கு மடக்கிட்டியோல்லியோ. அத்தோட விட்டுடணும். அதுக்கு மேலயும் அவன மண்ணோட நசுக்குறது தப்புடா. அவ்வளவு க்ரோதம் உனக்கு ஆகாதுடா. அவனும் உன் ஃப்ரெண்டுதானே...?”

என்னைப் பேச்சுப் போட்டிக்குத் தயார்ப்படுத்துவதும், நான் எழுதும் அசகு பிசகு விருத்தங்களைத் திருத்தித் தட்டிக் கொடுப்பதும், என் தந்தையார் சொல்லிக் கொடுக்கும் கம்ப ராமாயணச் செய்யுளை அப்படியே சென்று சொல்லும்போது என்னைக் கட்டி அணைத்துக்கொள்வதுமாக என் பள்ளிக் காலத்தை ஒரு தேவதூதனாகக் கடத்திக்கொண்டிருந்தார் கோபால சக்ரவர்த்தி சார்...

அன்றைய நாட்களில் இந்து உயர் நிலைப்பளியில் போடப்பட்டுக் கொண்டிருந்த “மிட் டே மீல்ஸ்” இன்றைய சத்துணவு போலில்லை. கல்வியை நாடி வரும் மாணவர்களுக்கு ஏற்ற மரியாதையான உணவாகவே இருந்தது அது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மட்டும் வருட ஆரம்பத்திலேயே பெயர் கொடுத்து இணைந்துகொள்வார்கள். அது குறித்த கூச்சமும் இருந்தது என்பதால் லீவ் நாட்களில்தான் பெயர் கொடுக்க அழைப்பார்கள்.

வீட்டிலிருந்து டிஃபன் பாக்ஸில் உணவு கொண்டு வரும் நாங்களெல்லாம் மதிய உணவு இடைவேளையின்போது, “ஆ...ஹோ...” வென்று இறைந்தபடி, வந்த வித விதமான உணவை பிரித்து வைத்துக்கொண்டு, கூடி அமர்ந்து சாப்பிடுவோம்.

ஏழை மாணவர்கள் மட்டும் “மிட் டே மீல்ஸ்” என்னும் அந்த இலவச சாப்பாட்டுக்காக எங்களைக் கடந்து வரிசையாகச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களின் உடைகளே அவர்களின் ஏழ்மை நிலையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

எங்கள் பக்கம் பார்க்காமல் வேறெங்கோ திரும்பிப் பார்த்தபடி அவசரம் காட்டிச் சென்றுகொண்டிருப்பார்கள். எனது வகுப்பில் எனக்கு அருகருகே அமரும் நாகராஜும், வேங்கட கிருஷ்ணனும் அந்த வரிசையில் இருப்பார்கள்.

“டேய்...ஈவ்னிங் மேட்ச் உண்டாடா...” என்று இரைந்து கேட்டாலும், காதில் விழாததுபோல வேகமாகப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

கோபால சக்கரவர்த்தி சார் ஒரு பழக்கத்தை ஆரம்பித்தார். தன் கைக் காசைப் போட்டு பாக்கெட் பாக்கெட்டுகளாக கலர் மிட்டாய்களை வாங்கிக்கொண்டு “மிட். டே மீல்ஸ்” போடப்படும் இடத்தில் சென்று நின்றுகொள்ளத் துவங்கினார்.

“மிட் டே மீல்ஸ்” சாப்பிட்டு விட்டு திரும்பும் மாணவர்களுக்கு தான் வாங்கி வந்த கலர் மிட்டாயைக் கொடுப்பார். எல்லோரும் அவசர அவசரமாக ஈரக் கைகளை டவுசரில் துடைத்தபடியே வந்து கலர் மிட்டாயை வாங்கி வாயில் அடக்கிக்கொண்டு ஆரவாரமாக வகுப்புக்குத் திரும்புவார்கள்.

ஒரு முறை நானும் அங்கே போனேன்.

அப்போது, “மிட் டே மீல்ஸ்” முடித்த நாகராஜ் கலர் மிட்டாய் வாங்க வேகவேகமாக வந்துகொண்டிருந்தான். நானும் ஓடிப் போய் கோபால சக்ரவர்த்தி சாரிடம் கலர் மிட்டாய் கேட்டு உரிமையோடு கை நீட்டினேன்.

பட்டென என் கையைத் தட்டி விட்டவர் “போடா க்ளாஸுக்குக் போ... கலர் மிட்டாய் வேணுமாமில்ல...” என்று விரட்டியவர் நாகுவுக்கு மட்டும் சிரித்தபடியே கொடுக்க... கோபால சக்ரவர்த்தி சாரா என்னிடம் இப்படி நடந்துகொண்டார் என்று எண்ணி எண்ணிக் கண்ணில் நீர் தளும்பத் திரும்பி ஓடி வந்துவிட்டேன். மதியம் வகுப்பு எடுக்க வந்தபோதும் அவர் முகம் பார்க்காமல் இருந்துகொண்டேன்.

அன்று மாலை, சைக்கிள் ஸ்டாண்ட் கிரவுண்டில் தெலுங்கு மீடியம் பசங்களோடு கபடி மேட்ச் ஆடிக்கொண்டிருந்தோம். தெலுங்கு மீடியம் மாணவர்கள் ஓங்கு தாங்காக இருப்பார்கள். அவர்களோடு கபடி ஆடி ஜெயிப்பது கடினம். ஆக்ரோஷமான மேட்ச்.

ஸ்டாண்டில் சைக்கிள் எடுக்க வந்த கோபால சக்ரவர்த்தி சார் அங்கே நின்றபடி “டேய் சீராமா” என்று என்னை அழைத்தார்.

கலர் மிட்டாய் கொடுக்கத்தான் கூப்பிடுகிறார் என்று புரிந்துகொண்டவன் ஒன்றுமே கேட்காதது போல என் போக்கில் ஆடிக்கொண்டிருந்தேன்.

“டேய்...” என்று அவர் உரத்த குரலில் அழைக்க, “டேய் சார் கூப்புடுறாருடா...” என்று நாகராஜ் கை காட்டிவிட, சலித்துக்கொண்டே அவரருகில் சென்று முகம் பார்க்காமல் நின்றேன்.

சைக்கிள் ஸ்டாண்டுக்கும் தண்ணீர்க் குழாய் மேடைக்கும் நடுவில் இருக்கும் ஒரு சிறிய இடத்துக்கு சென்றவர் தன் பஞ்சகச்சத்தைச் சரி செய்துகொண்டபடியே அங்கே இருந்த ஓர் பெரிய சைஸ் கல்லில் அமர்ந்துகொண்டார்.

என்னை எதிரே மண்ணில் அமரச் சொன்னார். முகத்தை திருப்பிக்கொண்டே அமர்ந்தேன். கண்ணில் நீர் வர ஆரம்பித்து விட்டது...

சிரித்துக்கொண்டே சற்று முன் குனிந்தபடி ஆரம்பித்தார்...

“ ஏண்டா அழறே..?”

“.....”

“கேளு, நீங்களெல்லாம் வீட்டுல இருந்து சாப்பிடக் கொண்டுவந்துடறீங்க. உங்களுக்கெல்லாம் பகவான் அந்த வசதியைக் கொடுத்துட்டான். சாப்பிடக் கூட வசதி இல்லாதவங்கதான் “மிட் டே மீல்ஸ்” சாப்பிடறாங்க இல்லையா...?”

“....”

“ஐயோ, இவங்களைப் போல எங்க வீட்டிலும் வசதி இருந்திருந்தா நானும் கௌரவமா உக்காந்து சாப்பிட்டிருப்பேனே... கடவுளே எங்களை மட்டும் ஏன் இப்படி ஓஸி மீல்ஸ் சாப்பிட க்யூவுல அனுப்பி வைக்கிறேன்னு அவங்க நினைக்க இடமிருக்கு இல்லையா...?”

“.....”

“மத்தவங்கள விட நான் தாழ்ந்து போயிட்டேனான்னு அவங்க மனசு நோக இடமிருக்கு இல்லையாப்பா..?”

“சார்...”

“ம்ம்ம். இப்போ, அவனுக்கு கிடைச்ச கலர் மிட்டாய் உனக்கு கிடைக்காது இல்லையா? அந்த கலர் மிட்டாய்க்காக நீங்களெல்லாம் ஏங்குறீங்க இல்லையா? நமக்கு மட்டும்தான் கலர் மிட்டாய் கிடைக்குதுங்கற அந்த சின்ன சந்தோசம் அவனோட தாழ்வு மனப்பான்மைய சமன் செஞ்சிவிடக் கூடுமில்லையா...?”

“சார்...”

“ஸ்ரீராமா நல்லா கேட்டுக்கோ... இந்த உலகத்திலேயே கொடூரமான விஷயம் எதுன்னா ஒருத்தன் தன்னைப் பத்தி தாழ்வா நினைச்சி மருகி நிக்கறதுதான். அப்படி ஒருத்தன் நொந்து நின்னுட்டான்னா, அப்புறம் அவனால மேல எழுந்து வரவே முடியாம போயிடும்ப்பா. அதை பாத்துக்கிட்டு சும்மா நிக்கக் கூடாதுப்பா. அது மகாபாவம்.

அந்த நேரத்துல மட்டும் அவனைக் கொஞ்சம் கை குடுத்து தூக்கி விட்டுட்டோம்னு வை... சட்டுன்னு நிமிர்ந்துடுவான். அப்புறம் அவனால இந்த உலகத்துக்கு நல்ல காரியம் எல்லாம் நடந்துடும்... எனக்குத் தெரியும் நீ சமத்துப் பையன். நன்னாவே புரிஞ்சுக்குவ...”

அந்த ஞானாசிரியர் சைக்கிளேறிப் போயே போனார்.

சடாரென எழுந்து குடிதண்ணீர் குழாய்க்கு ஓடி “மடக் மடக்” கென்று தண்ணீர் குடித்து விட்டு அன்று நான் ஆடிய அசுரத்தனமான கபடி ஆட்டம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.

வீட்டுக்குத் திரும்பும்போது எங்கள் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர் ராஜுவிடம் கெஞ்சிக் கூத்தாடி நாகுவையும் ஏற்றிக்கொண்டேன். கங்கணா மண்டபத்தில் அவன் அம்மா வைத்திருக்கும் காய்கறிக் கடையில் இறக்கி விட்டுத்தான் வீட்டுக்குப் போனேன்.

மறுநாள், மிட் டேமீல்ஸ் முடித்து க்ளாஸுக்கு வந்து உக்கார்ந்த நாகு, கோபால சக்ரவர்த்தி சார் கொடுத்த கலர் மிட்டாயைத் தன் சட்டை நுனியில் வைத்து பாதியாகக் கடித்து எனக்குத் தந்தான். முகம் பார்த்துச் சிரித்தான்.

“தாங்க்ஸ்டா நாகு”

“இருக்கட்டும்டா....நீ என் ஃப்ரெண்டுதானேடா...!”

கட்டுரையாளர் குறிப்பு

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: [email protected]

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018