மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: சுகாதாரத்துறை மீது அக்கறையற்ற அரசு!

சிறப்புக் கட்டுரை: சுகாதாரத்துறை மீது அக்கறையற்ற அரசு!

தீபா சின்ஹா

2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் அருண் ஜேட்லியால் அறிவிக்கப்பட்ட சுகாதாரத் திட்டம் மிகச் சிறப்பானது போன்று பாராட்டப்படுகிறது. இந்த பாராட்டுதல் மேம்போக்கானது என்றுதான் சொல்ல வேண்டும். சுகாதாரத் திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் அளித்துள்ள முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டியதல்ல, அது கவலைக்குரியது தான். சுகாதார நலனை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தத் தவறியுள்ளது. சுகாதாரத் திட்டம் தொடர்பான அருண் ஜேட்லியின் பேச்சில் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார். "சுகாதார அமைப்பை மக்களின் வீடுகளுக்கே நேரடியாகக் கொண்டுசெல்வது, தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தில் 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களை இணைப்பது, நாடு முழுவதும் உள்ள 50 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைகளுக்காக குடும்பம் ஒன்றிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்குதல்" போன்ற திட்டங்கள் ஜேட்லியின் பேச்சில் இடம் பெற்றிருந்தது.

இதன் தொடர்ச்சியாக சில ஊடகங்கள் சுகாதாரத் துறையில் புரட்சி என்றெல்லாம் எழுதத் தொடங்கியுள்ளன. சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு இது புதிய தொடக்கமென்றும், சுகாதார வசதிகளை மேம்படுத்துமென்றும் இதன்மூலம் குடும்பத்தின் செலவுகள் குறையுமென்றும் கூறுகின்றனர்.

இந்த வெற்றுக் கூச்சல்கள் சுகாதாரத் துறையை எந்த அளவுக்கு வளர்ச்சியடையச் செய்யும்? பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது போன்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. 2018-19 பட்ஜெட்டில் தேசிய குடும்ப நலத் துறைக்கு ரூ.52,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டை (2017-18) விட 2.5 சதவிகிதம் மட்டுமே கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தேசிய குடும்ப நலத் துறைக்கு ரூ.51,550.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சுகாதாரத் துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஜிடிபி வளர்ச்சியை விடக் குறைவாகும்.

1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக இத்திட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணை மையத்திற்கும் ரூ.80,000 வழங்கப்படும். இது இவற்றின் தேவைகளை நிரப்ப போதுமானதாக இல்லை. மேலும் இது புதியத் தொடக்கமும் இல்லை. 2017ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலிலும் இடம் பெற்றிருந்தது. 2017ஆம் ஆண்டில் இதன் மீதான பணிகள் தொடர்பான எந்த அறிக்கையும் இல்லை. இந்த நிலையில் இது எப்படி வளர்ச்சித் திட்டம் என்று கூற இயலும்?

தற்போது துணை சுகாதார மையங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது மிக மோசமாகவுள்ளது. இந்த மையங்களில் ஆட்கள் பற்றாக்குறையும், சாதனங்கள் பற்றாக்குறையும், மருந்துகள் பற்றாக்குறையும் நிலவுகிறது. சுகாதாரத் துறை வெளியிட்ட கிராமப்புற சுகாதார நிலைகள் குறித்த அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 1,56,231 துணை மையங்களில் 17,204 துணை மையங்கள் மட்டும்தான் இந்திய பொது சுகாதார தரநிலைகளுக்கு இணையாகவுள்ளது" என்று கூறியுள்ளது. இது மொத்த துணை சுகாதார நிலையங்களில் வெறும் 11 சதவிகிதம் மட்டுமேயாகும். இந்த அறிக்கை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. மேலும் இந்த அறிக்கையில், "20 சதவிகித துணை சுகாதார நிலையங்களில் சீரான தண்ணீர் விநோயோகம் இல்லை. 20 சதவிகித துணை சுகாதார நிலையங்களில் மின்சார வசதி சீராக இல்லை. 6,000க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களில் சுகாதார பணியாளர்களே (பெண்கள்) இல்லை. கிட்டத்தட்ட 1 லட்சம் துணை சுகாதார மையங்களில் ஆண் சுகாதார பணியாளர்கள் இல்லை. 4,243 துணை மையங்களில் இருவரும் (ஆண் மற்றும் பெண் சுகாதார பணியாளர்கள்) இல்லை. யதார்த்த நிலை இப்படியிருக்கையில் வெறுமனே இத்துறைக்கு நிதி ஒதுக்குவது மட்டும் என்ன பயனை அளிக்கப் போகிறது?

அடுத்ததாக, உலகிலேயே சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா தான் அதிக நிதி ஒதுக்கியிருக்கிறது என்று கூறி வருகிறார்கள் சிலர். 2016-17ஆம் நிதியாண்டு பட்ஜெட்டை சற்று நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். இதே அருண் ஜேட்லி தான் அப்போதும் நிதியமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். புதிய சுகாதாரத் திட்டத்தை அந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலில் ஜேட்லி அறிமுகப்படுத்தினார். இதன்படி, சுகாதார பாதுகாப்பு நிதியாக ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியை அந்த உரையில் ஜேட்லி பதிவு செய்திருந்தார். தற்போது இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது. அதேபோல ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டம் (RSBY, தேசிய சுகாதாரக் காப்பீடு திட்டம்) ஆண்டுக்கு ரூ.30,000 வழங்க உறுதியளித்திருந்தது. தற்போது இந்த நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிதியில் ரூ.500 கோடிக்கும் குறைவாகத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்மதிப்பீட்டுத் தொகையை விட 50 சதவிகித நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விடச் சிறிதளவு உயர்த்தப்பட்டு ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுவது ஒன்றாகவும், நடைமுறைப்படுத்துவது ஒன்றாகவும் இருப்பதால் இந்த பட்ஜெட் அறிவிப்பின் மீதும் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.

மற்றொருபுறம், கல்விக்கு 3 சதவிகித வரியும், சுகாதாரத் துறைக்கு 4 சதவிகித வரியும் புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.11,000 கோடி வருவாய் கூடுதலாக ஈட்ட முடியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறைக்கு 25 சதவிகிதம் கூடுதல் தொகை கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.2,750 கோடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.1,250 கோடி மட்டுமே இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் பின்புலத்தில் பொதுமக்களிடமிருந்து கூடுதல் வருவாய் ஈட்டுவது தான் நோக்கமாக இருக்கிறது. ஆனால் ஏழை மக்களுக்குச் சுகாதார வசதிகளை அதிகரிப்பது போன்ற தோற்றத்தை மட்டும் ஏற்படுத்தியுள்ளனர். உண்மையில் இதன்மூலம் தனியார் சுகாதார அமைப்புகள் தான் கூடுதல் லாபமீட்டும். சுகாதார மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த பட்ஜெட் திட்டத்தின் பலனை பெரிதும் பெரும்.

மற்ற உலக நாடுகளை எடுத்துக் கொண்டோமானால், அங்கும் தனியார் துறை நிறுவனங்கள் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ளன. அவை சுகாதாரக் காப்பீட்டின் அடிப்படையில் இயங்குகின்றன. கூடுதல் தொகைகளை மக்களிடம் இருந்து பெறுவதில்லை. இதனால் தனியார் துறைகளிலும் சுகாதாரச் செலவுகள் கட்டுக்குள்ளேயே உள்ளது. எனவே மத்திய பாஜக அரசும் மக்களின் சுகாதாரத்திற்கு ஏதாவது செய்ய நினைத்தால் இந்தியாவில் இயங்கும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் இதுபோன்ற விதியை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யாமல் பொதுச் சுகாதார அமைப்பை வலுவாக்க இயலாது.

பொதுமக்களின் சுகாதாரத்துக்கான செலவுகளைக் குறைப்பதில் காப்பீட்டு முறை போதுமானதாக இல்லை. RSBYயின் சுயாதீனமான மதிப்பீடுகள், இந்தத் திட்டத்தில் கணிசமான அளவுக்கு பொதுமக்களின் பாக்கெட் செலவினங்களைக் குறைக்க முடியவில்லை, மாறாக ஏழைகளுக்குச் சுகாதார பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. பாஜக 2016ஆம் ஆண்டில் கொண்டுவந்த புதிய சுகாதாரத் திட்டம் நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். முந்தையத் திட்டம் பொது சேவைத் திட்டமாக இருந்தது. ஆனால் தற்போது இத்திட்டம் அனைவருக்குமானதாக இல்லை. இந்தத் திட்டம் இந்தியாவின் முக்கிய சிக்கலாக விளங்குகின்ற பொதுமக்களின் பாக்கெட் செலவுகளை குறைப்பதற்குத் தீர்வை அளிக்கவில்லை. 67 சதவிகித சுகாதாரத் தேவைகளுக்கான செலவுகளை பொதுமக்களே செய்கின்றனர். 63 சதவிகித நோயாளிகளும் தங்கள் பணத்திலேயே செலவு செய்கின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு காப்பீட்டுத் திட்டங்கள் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டன. சுகாதார செலவுகளுக்கு பொதுமக்கள் தங்களுடைய பணத்தை எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்பது தேசிய மாதிரி ஆய்வு (என்.எஸ்.எஸ்.) அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சுந்தரராமன் மற்றும் முரளிதரன் ஆகியோரின் பகுப்பாய்வின் அடிப்படையிலான 2014ஆம் ஆண்டு என்.எஸ்.எஸ். அறிக்கையில், "கிராமப்புறங்களில் 1.2 சதவிகிதப் பேரும், நகர்ப்புறங்களில் 6.2 சதவிகிதப் பேரும் உள்நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். காப்பீட்டுப் பயன்களுக்கு ஊக்குவிக்கப்பட்டிருந்தாலும் ஏழை மக்கள் இதனால் பெரிதும் பயன்பெறவேயில்லை. பொதுச் சேவைகளில் காப்பீடுகள் அதிகரிக்கும்போது அரசாங்கத்தின் ஒதுக்கீடு குறைகிறது. மேலும். தனியார் துறைகள் ஏழை மக்களிடம் இதன்மூலம் வருவாய் ஈட்டுதலும் அதிகரிக்கிறது. சட்டிஸ்கரில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் மாநில சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் RSBY இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், சத்திஸ்கரில் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் அதிகளவில் நகர்ப்புற மக்களிடம் பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த மருத்துவமனைகள் எட்ட இயலாத ஒன்றாகவும் விளங்குகின்றன.

இவ்வாறு இந்திய மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட சுகாதாரச் செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால் ஏழை மக்களின் வறுமை மேலும் அதிகரிப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதன்காரணமாக 7 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வந்துள்ளனர். எனவே இந்தப் புதியத் திட்டம் உலகளாவிய பொது சுகாதாரத் திட்டத்தை (யூ.ஹெச்.சி.) நோக்கிப் பயணிப்பது இயலாதது. மேலும் இந்த சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் பத்து கோடி குடும்பங்களை மட்டுமே இணைக்கிறது. இது மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதம் மட்டுமேயாகும்.

அரசு கமிட்டிகள், தேசிய சுகாதாரக் கொள்கைகள் இந்தியாவின் சுகாதாரத் துறையின் செலவுகளை ஒட்டுமொத்த ஜிடிபியில் 2.5 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை உயர்த்த வேண்டும் என்றே கூறுகின்றன. இருப்பினும் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிலும் ஜிடிபியில் 1 முதல் 1.2 சதவிகிதம் வரை மட்டுமே சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு நீடிக்கிறது. ஆனால் செய்திகள் தவறாக வெளியிடப்பட்டு வருகின்றன. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இன்னமும் குழந்தைகள் இறப்பும், பிரசவ கால தாய்மார்கள் இறப்பும் அதிகமாகவே இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் இருந்தால் ஏன் இத்தகைய இறப்புகள் அதிகமாக நடைபெறுகிறது? அரசாங்கம் குடிமக்களின் ஆரோக்கியத்தின் மீது எந்தவிதமான கடமையும் ஆற்றவில்லை என்பதைத்தான் இந்த அறிக்கைகள் காட்டுகின்றன.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018