மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

விமர்சனம்: ஏமாலி

விமர்சனம்: ஏமாலி

ஐ.டி ஊழியர்களான சாம் ஜோன்ஸும், அதுல்யாவும் காதலித்து வருகின்றனர். மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது காதலில் திடீரென ஒரு சறுக்கல்வர இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிடுகின்றனர். காதலைப் பிரிந்ததையடுத்து சாம் அவரது நண்பர்களுக்கு விருந்து வைக்கிறார். இதையடுத்து மீண்டும் சில நாள்களில் அதுல்யாவுக்கு போன் செய்கிறார் சாம். ஆனால், அவளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும் அவளது மொபைல் நம்பர் வெயிட்டிங்கிலேயே இருப்பதால் அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்துக்கொள்ளும் சாம், அதுல்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதை சமுத்திரக்கனியிடமும் சொல்ல, முதலில் சாமைத் தன்வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார் சமுத்திரக்கனி. அது முடியாத நிலையில், சாம் வழியிலேயே சென்று அவனது மனநிலையை மாற்ற முடிவு செய்கிறார். போலீஸில் சிக்காமல் எப்படிக் கொலை செய்ய முடியும் என்பது குறித்து இருவரும் திட்டம் போடுகின்றனர். அதற்காகக் கொலைக்குப் பின்னர் போலீஸ் எப்படியெல்லாம் விசாரணை நடத்துவார்கள்; அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பது குறித்தும் யோசிக்கின்றனர். கடைசியில் சமுத்திரக்கனியுடன் சேர்ந்து சாம், அதுல்யாவைக் கொன்றாரா அல்லது சமுத்திரக்கனி சாமின் மனதை மாற்றினாரா, சாம் - அதுல்யா இருவரும் ஒன்றுசேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.

திரைக்கதையைப் பொறுத்தவரையில் தற்போதைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது தொழில்நுட்ப வாழ்க்கை, காதல் அவர்களை எப்படி மாற்றுகின்றன என்பதைச் சமூகத்துக்குத் தேவையான கருத்துடன் இயக்கியிருக்கும் வி.சி.துரைக்குப் பாராட்டுகள். காதல் தோல்விக்காகக் கொலையோ, தற்கொலையோ செய்துகொள்வது தவறு என்பதைச் சொல்ல வந்திருக்கிறார். அதே போல் கற்பனையான கொலைக்குப் பின்னணியில் சென்று அதை விசாரிப்பது, மாட்டிக்கொள்ளும் நேரங்களில் அதை உடனே சரி செய்வது எனப் புதுமையான அணுகுமுறையைத் திரைக்கதைக்குள் புகுத்தி மிகவும் கச்சிதமாகச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

சாம் ஜோன்ஸ் முதல் படத்திலேயே நான்கு கதாபாத்திரங்களில் வந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் தோல்வியால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதுல்யா கவர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். நாயகனுக்குப் போட்டியாக தன் நடிப்பில் அசத்தியுள்ள அதுல்யா நாயகனைவிட அதிகமாகப் புகைபிடித்து அதிர்ச்சியூட்டியிருக்கிறார். சமுத்திரக்கனி எப்போதும் போல அவரது கதாபாத்திரத்துக்கு வலுவூட்டியிருக்கிறார். ரோஷிணி பிரகாஷ், பால சரவணன், சிங்கம் புலி ஆகியோர் கதைக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

சாம்.டி.ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்குக் கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. ஐ.ஜே.பிரகாஷ், எம்.ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. படத்தொகுப்பாளரான சுதர்சன் காட்சிகளை விறுவிறுப்போடு கச்சிதமாகக் கொண்டு சென்றிருக்கிறார்.

படம் முழுக்க வரும் இரட்டை வசனங்கள் முகம் சுளிக்கவைப்பதோடு வசனங்களை இயக்குநர் துரையுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதாக டைட்டிலில் பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

மாறி மாறிக் காட்சிகள் நகர்வது சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை உருவாக்கியிருந்தாலும், பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்கதை அமையவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

சமூக ரீதியான கருத்தைச் சொல்வதைக்காட்டிலும் ஆபாசமே மிகையாக இருப்பது எரிச்சலூட்டுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

படம் இப்படி இருக்க, அதில் உள்ள வேறோர் அம்சம் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. சமீபத்தில் வந்த படங்களில் பெண்களை இத்தனை கேவலமாகக் காட்டிய ஒரு படம் வந்ததே இல்லை என ஆணித்தரமாகச் சொல்லலாம். ஒரு பெண் ‘நான் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு அஃபேரில் இருக்கிறேன்’ எனப் பெருமையாகச் சொல்கிறார். இன்னொரு காட்சியில், தன்னை விசாரிக்க வந்த காவல் அதிகாரியிடமே ஆபாசமாகப் பேசி அவரைக் கவர முயல்கிறார் ஒரு பெண். இவற்றைக்கூடக் கதை, பாத்திரச் சித்தரிப்பு என்று விட்டுவிடலாம். ஆனால், பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களை என்னவென்று சொல்வது?

‘பொம்பளைங்கன்னாலே ஏமாத்துவாங்க’ என்கிற கருத்தும் பல முறை சொல்லப்படுகிறது. குடிகாரர்களுக்கு இலவசம் என தன் வண்டியில் எழுதிவைத்திருக்கும் ஒரு டாக்ஸி டிரைவர், “குடிகாரங்க எல்லாம் குழந்தைகள் போல சாதுவானவர்கள். படத்துல குடிக்கும் காட்சி வர்றப்போ ‘உடல்நலத்துக்குத் தீங்கு’ன்னு போடுற மாதிரி, காதல் காட்சி வர்றப்போ ‘பொண்ணுங்க ஏமாத்திடுவாங்க, ஜாக்கிரதையா இருங்க’ன்னு போட்டு பசங்களைக் காப்பாத்தணும்” என ஓர் ‘உயரிய’ சிந்தனையை உரத்துச் செல்கிறார். பெண்களே தங்களை இழிவுபடுத்திக்கொள்வது போல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தைத் தவிர எல்லோருமே, பெண்களை வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே பார்க்கிறார்கள். ஒருகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் படத்தில் வரும் எல்லா ஆண்களுமே வக்கிர புத்திக்காரர்களாகவோ, எந்நேரமும் குடித்துத் திரிபவர்களாகவோ அல்லது சந்தேகப் பிராணிகளாகவோ மட்டுமே காட்டப்படுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் எல்லோருமே இப்படித்தான் என்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை வெற்றிகரமாகக் கட்டமைத்துள்ளதோடு, இன்றைய இளம் காதலர்கள் எல்லோரும் இப்படித்தான், செக்ஸ்தான் அவர்களது உயரிய லட்சியம், ஒரே குறிக்கோள் என்பதுபோல் பொதுமைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படம் வயது வந்தோருக்கானது என ஏ சான்றிதழ் பெற்றுள்ள படம் என்பதால் பாலியல் விஷயங்களை ஆட்சேபிக்க வேண்டியதில்லை. ஆனால், பெண்களை இழிவுபடுத்துவதை அப்படிக் கடந்து சென்றுவிட முடியாது. பாலியல் உள்ளிட்ட சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை வைத்திருப்பதற்கான அனுமதியாகவே ஏ சான்றிதழ் தரப்படுகிறது. அது குறிப்பிட்ட ஒரு பாலினத்தை இழிவுபடுத்துவதற்கான லைசென்ஸ் அல்ல என்பதை இயக்குநர் புரிந்துகொள்ள வேண்டும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018