துரோகம் செய்த தமிழக அரசு!


தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றம் செய்து உலகளாவிய அனைத்து தமிழ் மக்களுக்கும் ஆளும் தமிழக அரசு துரோகம் செய்து விட்டதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைநகர் தமிழ்நாடு அரசின் சார்பில் தலைநகர் டெல்லியில் இரண்டு இல்லங்கள் செயல்பட்டுவருகின்றனஅதனை 'தமிழ்நாடு இல்லம் ' என்பதிலிருந்து 'வைகை தமிழ் இல்லம்' மற்றும் 'பொதிகை தமிழ் இல்லம்' என பெயர் மாற்றம் செய்த அறிவிப்பை நேற்று (பிப்ரவரி 3 )
தமிழக அரசு வெளியிட்டது . இந்த பெயர்மாற்றத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்கு என்று பல தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று(4ம் தேதி ) இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தமிழக அரசின் சார்பில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் விருந்தினர் இல்லத்திற்கு வைக்கப்பட்டிருந்த “தமிழ்நாடு” என்ற பெருமையும், அருமையும் மிக்க சொல்லை மறைக்கத் துணிந்துள்ள அதிமுக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'தமிழ்நாடு', ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுடன் ஒன்றியிருக்கின்ற, உயிரோட்டமுள்ள ஒரு உயரிய சொல். அந்த உணர்வைச் சிதைத்திடும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தின் பெயரை மாற்றி, டெல்லியில் உள்ள தனது மேலாதிக்க எஜமானர்களை மகிழ்வித்து, தனது பணிவு மிகுந்த விசுவாசத்தை வெளிக்காட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பது மிகுந்த வேதனையளிகிறது" என்று கூறியுள்ளார்.
டெல்லியில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் கேரளா இல்லம், பிஹார் இல்லம் என்றெல்லாம் விருந்தினர் இல்லங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 'தமிழ்நாடு இல்லம்' என்ற கம்பீரமான பெயர் மட்டும் ஏன் இருக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் , மதராஸ் என்னும் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட போது நடந்த உணர்ச்சிமிகு நிகழ்வு ஒன்றையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர்சூட்டி, வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் அண்ணா, 'தாய்க்குப் பெயர்சூட்டிய தனயன்', என்று தமிழ் உலகத்தில் புகழப்படுகிறார்.
தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்டதையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியபோது, "என்னுடைய உடல்நிலை கருதி இந்தவிழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தடுத்தனர். ஆனால், அதைமீறி நான் இங்கே வந்திருக்கிறேன். காரணம், தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்டதற்காக நடக்கும் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், இந்த உடலும் உயிரும் இருந்தென்ன பயன்?" என்று உணர்ச்சிவயப்பட்டு உரையாற்றினார்.
அப்படிப்பட்ட பெயரின் அருமையை அறியாமல், வரலாறினை உணராமல் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டை ஆளும் பாஜகவின் பினாமி அரசு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.