மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

தரவரிசையில் முதலிடம் பெற்ற இந்திய அணி!

தரவரிசையில் முதலிடம் பெற்ற இந்திய அணி!

இந்திய, தென்னாப்ரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாப்ரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர்களை இழந்தாலும், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதைத் தொடந்து, செஞ்சூரியனில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றது.

இன்று (பிப்ரவரி 4) தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. தென்னாப்ரிக்க அணியின் கேப்டனாக முதல் போட்டியில் செயல்பட்டு வந்த ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. எனவே அவருக்குப் பதிலாக ஐடின் மார்க்கம் கேப்டனாகச் செயல்பட்டார். தென்னாப்ரிக்கா அணியில் கயா ஸோண்டோ, தாபராஸ் ஷாஸி என இரு அறிமுக வீரர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய தென்னாப்ரிக்க அணி, ஹஷிம் ஆம்லா (23), டி காக் (20) இருவரும் ஆட்டமிழந்ததும் சரிவைச் சந்தித்தது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழத் தொடங்கின. இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல் இருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். புதுமுக வீரராகக் களமிறங்கிய கயா ஸோண்டோ 25 ரன்கள் சேர்த்து, சஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அவருடன் நீண்ட நேரம் நிதானமாக விளையாடிய ஜே.பி.டும்னியும் 25 ரன்களைச் சேர்த்து, சஹல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் தென்னாப்ரிக்கா அணி 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் சஹல் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் ஜிம்பாவே அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததே குறைந்தபட்ச ரன்னாக இருந்தது. அதற்கும் குறைவான ரன்களுக்குள் ஆட்டமிழந்து தென்னாப்ரிக்கா அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

அதன் பின்னர் 119 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினர். ரோஹித் ஷர்மா முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். ஆனால் ராபடா வீசிய இரண்டாவது ஓவரில் ரோஹித் ஷர்மா அடிக்க முயற்சி செய்து அது கீப்பர் டி காக்கிடம் சென்றது. பேட்டில் பட்டது போல் சத்தம் கேட்கவே நடுவர் அதனை அவுட் எனத் தெரிவித்தார். ஆனால் ரிவ்யூ செய்து அதிலிருந்து ரோஹித் ஷர்மா தப்பினார். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை ராபாடா வீசிய அடுத்த ஓவரிலேயே ரோஹித் ஷர்மா (15) ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவன் உடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 20.2 ஓவரில் 119 ரன்களை சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவன் அரை சதம் அடித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 4 பிப் 2018