மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

இடைக்கால நிவாரணம் வெறும் கண்துடைப்பு நாடகம்!

இடைக்கால நிவாரணம்  வெறும்  கண்துடைப்பு நாடகம்!

‘மின்வாரியப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய உயர்வு வழங்காமல், இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (பிப்ரவரி 3) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 90,000 பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், நான்கு மாதங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.10,000 உடனடியாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகத் தோன்றினாலும் இது மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை சில ஆண்டுகளுக்குத் தாமதப்படுத்தும் முயற்சியாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்து, அவர்களுக்கு 1.12.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 26 மாதங்களாகியும் இன்றுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை. புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த வரும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குப் பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16, 23 ஆகிய தேதிகளில் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அப்போது ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று, மின்வாரியத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்வதாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளும் உறுதியளித்தனர்.

ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தமிழக அரசு ஆர்வம்காட்டாததால், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த மாதம் தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சமரசப் பேச்சுக்களின்போது, வரும் 12ஆம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று மின்சார வாரிய அதிகாரிகளும், தொழிலாளர்நலத் துறை அதிகாரிகளும் உறுதியளித்தனர். அதன்படி, இன்னும் 10 நாள்களில் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது மின்வாரிய பணியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்னும் இறுதி செய்யாததற்கு அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பணிச்சுமை காரணமாகவே புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியிருக்கிறார். மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 26 மாதங்களுக்கு முன்பு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை இறுதி செய்வதைவிட மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு வேறு என்ன பணிச்சுமை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதைவிட, பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாதத்திற்கு இருமுறை புது டெல்லிக்குத் தூது சென்று வருவதுதான் தமது முக்கியப் பணியா என்பதை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இதற்காக பல கட்டங்களாகப் பேச்சு நடத்தவும் தேவையில்லை. தமிழக அரசு பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை தீர்மானிப்பதுதான் மிகவும் சிக்கலானது ஆகும். ஆனால், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்டதைப்போலவே, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்ததன் மூலம், இந்தச் சிக்கலுக்கு மிக எளிதாக தீர்வு காணப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களும் அதே அடிப்படையில் ஊதிய உயர்வு கோரிய நிலையில், அவர்களுக்கு 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதை போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய உயர்வு விகிதம் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 4 பிப் 2018