அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்துள்ளோம்!

‘அசாமின் அனுகூலம்’ என்ற தலைப்பில் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் 2 நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவங்கிவைத்தார்.
இதில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்காய், 16 நாடுகளிலிருந்து 4500 பார்வையாளர்கள் , அசாம் மாநிலத்தின் முதல்வர் சர்பானந்தா சோனோவால், முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாட்டா போன்ற தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:
“அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் , மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து , சிக்கிம், திரிபுரா போன்ற 8 வடக்கு கிழக்கு மாநிலங்களும் அஷ்ட லட்சுமிகள் ஆகும். இந்த மாநிலங்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக இருக்கிறது.
ஒரு நாடு முழுமையான வளர்ச்சியடைய அந்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியடைய வேண்டும். இதனால்தான் பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சியடைய செய்யக் கிழக்குக் கொள்கையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். உலகின் கிழக்காசிய நாடுகள் இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்களோடு வர்த்தகம், நட்புறவு போன்ற தொடர்பு மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ரயில்பாதை அமைப்பதற்காக ரூ.47 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 2, 3 ஆண்டுகளில் இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேலும் 90 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்யும்.
நாட்டின் வளர்ச்சிக்காகக் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு தடைகளை உடைத்துப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது இந்தியாவில் தொழில் தொடங்குவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளதால் 2016-17ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு மிக அதிகபட்சமாக சுமார் ரூ.4 லட்சம் கோடி அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.