மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

2003 - 2018: வரலாற்றை மாற்றிய இளம் அணி!

2003 - 2018: வரலாற்றை மாற்றிய இளம் அணி!

இந்திய கிரிக்கெட் அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நேற்று (பிப்ரவரி 3) கைப்பற்றியிருக்கிறது. பல திசைகளிலிருந்தும் பாராட்டு மழை குவிந்துவரும் இந்த நேரத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இன்னொரு உலகக் கோப்பைப் போட்டியை இது நினைவுபடுத்துகிறது - சற்றே வித்தியாசமான முறையில்!

2003ஆம் ஆண்டு. எட்டாவது உலகக் கோப்பைத் தொடர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகளில் கோலாகலமாகத் தொடங்கியது. கங்குலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் ஆப்பிரிக்க மண்ணில் களம் கண்டது. இந்திய மக்களும் இந்தியாவின் இரண்டாவது உலகக் கோப்பையை எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

எட்டாக்கனியான கனவு:

முதல் போட்டி நெதர்லாந்து அணிக்கு எதிரானது. இந்தப் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா நெதர்லாந்தை வீழ்த்தியது. பின்னர் இரண்டாவது போட்டியில் அப்போதைய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்தது. அதன் பின்னர் அந்தத் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில் இந்தியா Vs ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இறுதி வரை சென்று அரங்கேறிய இந்தத் தோல்வி, இந்திய அணியினர் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் ஆறாத வடுவாக மாறியது.

வெற்றியில் பிறந்த உத்வேகம்:

இந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலியா தன் முதல் போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் ப்ரித்வி ஷா மற்றும் மனோஜ் கல்ராவின் அபார ஆட்டத்தால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இளம் இந்தியாவுக்குப் புது உத்வேகம் பிறந்தது. இதன்பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று, ஃபைனல் வரை முன்னேறியது.

ஆஸ்திரேலியா தோல்வியுடன் இந்தத் தொடரைத் தொடங்கினாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து ஃபைனலுக்கு முன்னேறியது.

ஃபைனலில் இந்தியா Vs ஆஸ்திரேலியா. 2003ஆம் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் நழுவவிட்ட கோப்பையை இம்முறை கைப்பற்றும் முனைப்பில் இந்திய இளம் படை தயாராக இருந்தது. இந்த யுத்தத்தில் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது பயிற்சியாளர் ராகுல் திராவிட் (இவர் 2003ஆம் ஆண்டு சீனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்றிருந்தார்).

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியப் பந்துவீச்சு தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் சீரான இடைவெளியில் நடையைக் கட்டினர். இறுதியில் 217 ரன்கள் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக அமைந்தது. எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ப்ரித்வி மற்றும் மனோஜின் தொடக்கம் சிறப்பாக அமைந்ததால் வெற்றி இன்னும் எளிதானது.

2003ஆம் ஆண்டு சீனியர் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்குத் தற்போது 15 ஆண்டுகள் கழித்து ஜூனியர் இந்தியா மூலம் பழி தீர்த்துக்கொண்டார் ராகுல் திராவிட். அந்தத் தொடரில் இந்தியா இரண்டே போட்டிகளில் தோற்றது. அந்த இரண்டு ஆட்டங்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா இரண்டே போட்டிகளில் தோற்றது. அந்த இரண்டு ஆட்டங்களும் இந்தியாவுக்கு எதிரானது. வரலாறு திரும்பியிருக்கிறது. அந்தத் திருப்பத்தில் அணிகள்தான் இடம் மாறியிருக்கின்றன.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018