காமராஜர் பக்கம் கவனம் திருப்பும் தினகரன்

அண்ணா நினைவு நாளையொட்டி நேற்று தஞ்சையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த தினகரனின் அணுகுமுறை அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மக்களைச் சந்திக்கும் விதமாக ‘மக்கள் சந்திப்பு - புரட்சிப் பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணத்தைத் தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கினார் தினகரன். இரண்டாவது நாளாக சுவாமிமலையில் நேற்று பயணத்தைத் தொடங்கிய தினகரன் பல இடங்களிலும் பேசினார்.
முன்னதாக நேற்று பல்வேறு கட்சிகளும் அண்ணா நினைவு தினத்தை அனுசரித்த நிலையில், தினகரன் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த காரணத்தால் தஞ்சையிலேயே தினகரன் அணி சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காலையில் காமராஜர் சிலையிலிருந்து தொடங்கிய அமைதி ஊர்வலமானது ஒன்றரை கிலோ மீட்டர் கடந்து அண்ணா சிலையில் முடிவடைந்தது. அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தினகரன். ஊர்வலத்தில் தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது.
ஊர்வலப் பகுதியில் ரயில் நிலையம் அருகில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலை இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலத்தை தொடங்கியது அங்கிருந்தவர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தஞ்சை வட்டார தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில் “அண்ணா நினைவு தினத்தில் எம்.ஜி.ஆரின் சிலையிலிருந்து அமைதி ஊர்வலத்தை ஆரம்பித்தால் நிகழ்வின் முழு மையமும் எம்.ஜி.ஆர் மீது விழுந்துவிடும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரே காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என்று கூறியுள்ளார். அந்த அடிப்படையில்தான் புரட்சித் தலைவரின் தலைவரான காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலத்தைத் தொடங்கினார் தினகரன்” என்றார்கள்.
பழைய காங்கிரஸ் பூமியான தஞ்சாவூர், டி.டி.வி.தினகரனின் இந்த நடவடிக்கையிலும் நுண்ணரசியல் இருக்குமோ என்று விவாதித்து வருகிறது.