மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?

சிறப்புக் கட்டுரை: எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?

பா.நரேஷ்

2014ஆம் ஆண்டு மே மாதம் பாஜக ஆட்சியமைத்த பிறகு ஐந்து பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்றுவரை சாமானிய மக்கள் பற்றியோ, நாட்டின் நிதர்சன நிலை பற்றியோ மாண்புமிகு நிதியமைச்சர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதை அவரே நிரூபித்துள்ளார். எப்படி தெரியுமா?

“பட்ஜெட்டில் வேளாண் கடனுக்கு ரூ.11 லட்சம் ஒதுக்கீடு!” என்பது செய்தி.

அவ்வளவுதான், இந்த நிதி ஒதுக்கீட்டின்மூலம் விவசாயிகளின் மீட்பராக மத்திய அரசு சித்திரிக்கப்படுகிறது. கடைசிவரைக்கும் நிதர்சனத்துக்கும், சாமானியர்களுக்கும் அரசுக்கும் சம்பந்தமே இருக்கப் போவதில்லை என்பதைத்தான் இந்த வினையாட்டங்கள் காட்டுகின்றன. உண்மை நிலையை ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும் என்றுதான் உணரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

விவசாயம், கிராமப்புற மேம்பாடு, இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உள்ளிட்டவற்றுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக உற்பத்தி விலையில் 1.5 மடங்கு அளிக்கப்படுவதாகவும் வேளாண் கடனுக்கு 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் சந்தை மேம்பாட்டுக்கு 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்காக அத்தனை கோடிகள்?

மிகவும் சாதாரணமான கேள்வி கேட்கிறேன் அமைச்சரே. உண்மையிலேயே உங்களுக்கு விவசாயிகளின் உயிர்கள் மீதும் விவசாயத்தின் மீதும் அக்கறை இருந்தால், விவசாயக் கமிஷனை அமைத்திருக்க வேண்டும்தானே? சம்பளக் கமிஷனை மட்டும் அவ்வளவு மும்முரமாக அமைத்தவர்கள், விவசாயக் கமிஷனைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? கடன் தொகை வழங்குவதற்காக அத்தனை லட்சம் கோடிகளை ஒதுக்கியதற்குப் பதிலாக, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் அல்லவா? அப்படியில்லாமல் நீங்கள் யாருக்காக அத்தனை கோடிகளை ஒதுக்கியுள்ளீர்கள்? இனி விவசாயத்தில் முதலீடு செய்யப்போகும் முதலாளிகளுக்காகத்தானே? வேறு எந்த சாமானிய விவசாயியாலும் உங்கள் வேளாண் நிறுவனங்களில் அவ்வளவு சுலபமாகக் கடனைப் பெற்றுவிட முடியாதே. தொடர்ந்து விவசாயிகளைப் புறக்கணிப்பதும், விவசாயத்தில் பெருமுதலீடுகளை ஊக்குவிப்பதும் மறைமுகமாக நடந்துகொண்டிருந்தது. இந்த பட்ஜெட்டின் மூலம், அது வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான்.

இத்தனை கோடிகளும் யாருக்கானவை? பட்ஜெட், ஒதுக்கீடு இவையெல்லாம் யாருக்கானவை? விவசாயிகளுக்கானவை என்பது உங்கள் பதிலாக இருந்தால், உங்கள் பார்வையில் விவசாயிகள் என்பவர்கள் யார்? நீங்கள் கொடுக்கும் இதே கடன் தொகையை வாங்கி டெல்டா மாவட்டங்களில் நெல் பயிரிட்டு, நீரில்லாமல் அவை கருகிப்போவதைப் பார்த்து மனம் வெதும்பி, தண்ணீருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தஞ்சை மாவட்டத்தின் பச்சையப்பனுக்கு உங்கள் பட்ஜெட் எந்த வகையில் ஆறுதலைத் தரும்? எப்படியும் மாவட்ட, மாநில அரசியலில் சிக்கி, தண்ணீர் வருவதற்குள் அரசாங்கத்தின் ஆய்வறிக்கையில் மேலும் ஒரு விவாசாயி தற்கொலை என்று பச்சையப்பன் பெயர் சேர்ந்து ஒரு மாதம் ஆயிருக்கும். அதுவும் அவர் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டிருப்பார்? நீங்கள் கொடுத்த கடனையும், நீங்கள் கொடுக்கப்போவதாகச் சொன்ன தண்ணீரையும் நம்பி வாங்கிய கந்துவட்டிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருப்பார். வாக்குறுதிகளை அள்ளி வீசும்போது உங்கள் வாயில் தெறித்த எச்சில் அளவு தண்ணீர்கூட பச்சையப்பனுக்கு வந்தபாடில்லை.

சரி, உள்ளூர் கதையை விடுவோம். உங்கள் கதைக்கே வருவோம். உங்கள் கதைக்கு என்றால், ‘ஒரே நாடு ஒரே ஆட்சி’ எனும் உங்கள் கதைக்கே வருவோம். அந்த ‘ஒரே நாட்டில்’ நடக்கும் நிதர்சனங்களைப் பேசுவோமா?

விவசாயத்துக்காகக் கடன் தொகையை அதிகப்படுத்தியதைத் தவிர வேறெதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லையே. வேளாண் சந்தை மேம்பாட்டுக்கான தொகையும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதமும் இருக்கிறதே என்று கைகாட்ட உங்கள் விரல் ஓங்குவதற்கு முன், அந்தத் தொகையில் எத்தனை பேருக்கு எத்தனை பங்கு என்பது பேசி முடிக்கப்பட்டு, அந்தப் பணத்தைப் பங்கு போட கையேந்தும் அரசியல் விரல்கள் தயாராக இருக்கும். மீண்டும் உங்கள் அறிக்கைகளைப் பற்றிப் பேசிச் சமாளிக்க வேண்டாம். அறிக்கைகள் வேறு, சாமானியமும் நிதர்சனமும் வேறு. எப்போது இதைப் புரிந்துகொள்ளப்போகிறீர்கள் நிதியமைச்சரே!

அவ்வளவு ஏன்? இந்த நிதிகள் எல்லாம் சரியாகப் பயன்படும் என்ற உத்தரவாதத்தை உங்களால் அளிக்க முடியுமா? உங்களால் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே! நீங்கள் எப்படி இத்தனை பெரிய நிதி அமைச்சகத்தின் வாக்குறுதிகளை அரசியல் சாத்தான்களிடமிருந்து பாதுகாக்கப் போகிறீர்கள்?

தனிநபர் வருமான வரிவிலக்கு என்ன ஆயிற்று?

மத்தியில் பாஜக 2014 மே மாதம் 26ஆம் தேதி பதவியேற்றது. அதற்குச் சரியாக ஒரு மாதம் முன் ஏப்ரல் 2014ஆம் ஆண்டு நீங்கள் அளித்த பேட்டியில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் இதன் மூலம் 3 கோடிப் பேர் பயனடைவார்கள் என்றும் அவர்களால் தங்கள் வருமானத்தை 24 கோடி அளவில் சேமிக்க முடியும் என்றும் வாக்குறுதி கொடுத்தீர்கள்.

அதன் பிறகு 2014 ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மட்டும் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தினீர்கள். அதன் பிறகான நான்கு பட்ஜெட்களிலும் வருமான வரி உச்ச வரம்பில் ஒரு துளி மாற்றமும் செய்யப்படவில்லை. ஒருவேளை, 50 ஆயிரம் உயர்த்தப்போவதைதான் 5 லட்சம் என்று பேட்டியில் தவறாகக் குறிப்பிட்டீர்களோ? அப்படியானால் இவ்வளவு வலிமையான கணித அறிவுள்ள நிதியமைச்சர் எங்களுக்குக் கிடைத்ததற்கு நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்வோம்.

இதை நிறைவேற்றினால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படும். ஆதலால்தான் நிறைவேற்றவில்லை என்ற சுலபமான பதிலைச் சொல்லி நீங்கள் தப்பிக்க முடியாது. ஏனெனில், இந்த வரிவிலக்கு உச்ச வரம்பை உயர்த்துவதினால் அரசுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும், தேசிய வரி நிதியில் 1.5 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே இழப்பு ஏற்படும் என்றும் அதே பேட்டியில் கூறியிருந்தீர்கள்.

“மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் தோல்வி அடைந்துவிட்டார். இதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்பது பொருளாதாரம் தெரியாத ஆன்ட்டி இந்தியனின் குரல் அல்ல; முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குரல்.

“இந்த பட்ஜெட்டினால் விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்வேன்” என்று நான் சொன்னால், நான் ஆன்ட்டி இந்தியன். இதைச் சொன்னது முன்னாள் பிரதமர் தேவகவுடா. ஒருவேளை அவர் ஆன்ட்டி இந்தியனாக இருப்பாரோ!?

இவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், அதனால்தான் எதிர்க்கிறார்கள் என்கிறீர்களா ஜேட்லி அவர்களே! அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது நீங்களும் இதைத்தான் செய்தீர்கள் என்பதை நான் நினைவுபடுத்தித்தான் தங்களுக்குத் தெரிய வேண்டுமா?

இவையெல்லாம் உங்களின் அரசியல் விளையாட்டுகளில் சர்வசாதாரணமானதுதானே! ஆனால், உங்கள் விளையாட்டின் பகடைகளாகக் காலங்காலமாக சாமானியர்கள் சிக்கித் தவிப்பதும் உங்களுக்கு எப்போது புரியப்போகிறது!?

உங்களுக்குப் புரியாது. ஏன் தெரியுமா?

விவசாயம் முதல் உள்கட்டமைப்பு வரை அனைத்துத் துறைகளுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் திரு.மோடி அவர்கள் புகழாரம் சூட்டியிருக்கிறார். அது மட்டுமா? “நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குப் பாராட்டுகள் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.

இவைதானே உங்கள் பட்ஜெட் எனும் ஸ்க்ரிப்ட்டில் உள்ளது. மற்றவை புரியாதல்லவா!

சாமானியர்கள் இந்தியாவில் வாழ முடியாதல்லவா!

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 4 பிப் 2018