மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சிறப்புப் பார்வை: மத்திய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது!

சிறப்புப் பார்வை: மத்திய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது!

கிராமப்புற விவசாயிகளின் பிரச்னைகளைக் கவனிக்க மத்திய அரசு தவறிவிட்டது என்றும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி விவசாய சங்கங்கள் பசுமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை இந்திய வேளாண்மையின் நிஜமான பிரச்னைகளை அடையாளம் காட்டுகிறது.

பசுமை அறிக்கை: விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரம்-2018 என்று தலைப்பிடப்பட்ட இந்தப் பசுமை அறிக்கையானது டெல்லியில் கடந்த 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. அறிக்கையில், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு மத்திய அரசு அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஆதார விலைகளால் பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்ய முடியவில்லை என்றும் நாட்டின் வர்த்தகக் கொள்கையும் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கிராமப்புறத் திட்டங்கள் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளன என்று புள்ளிவிவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுமை அறிக்கையை ஜெய் கிசான் அன்டோலன், ரித்தூ ஸ்வராஜ் வேடிகா, வேளாண் கொள்கைகளுக்கான வழக்கறிஞர் குழு உள்ளிட்ட சங்கங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன.

பசுமை அறிக்கை குறித்து ஜெய் கிசான் சங்கத்தின் உறுப்பினர் யோகேந்திர யாதவ் கூறுகையில், “விவசாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக அடக்க விலையைக் காட்டிலும் 50 சதவிகிதம் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டது. குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித் தர நினைக்கும் மாநிலங்களையும் மத்திய அரசு தடுக்கிறது” என்று கூறுகிறார்.

“புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, கடந்த நான்காண்டு கால பாஜக ஆட்சிக்காலத்தில் விவசாயத்தில் முதலீடு செய்வதே முற்றிலும் குறைந்துவிட்டது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு பொருளாதார கணக்கெடுப்பும் இதை ஒப்புக்கொள்கிறது. அதாவது கடந்த நான்கு வருடங்களில் விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயத்தின் மூலமான வருமானம் என்பது விவசாயிகளுக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்ற தேக்க நிலையில்தான் உள்ளது” என்றும் யாதவ் குறிப்பிடுகிறார்.

அறிக்கையில் அலசப்பட்டுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், 2014-15 மற்றும் 2017-18ஆம் ஆண்டுக்காலங்களில் பயிர் வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட ஏழு வகை பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையானது, பயிர்களின் பராமரிப்புக்குச் செலவிட்ட தொகையை விட மிகவும் குறைவானதாகவே இருந்திருக்கிறது. மேலும் 17 பயிர் வகைகளின் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் நிகர வருமானம் என்பது கடந்த 2009-14 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை ஒப்பிடுகையில் தற்போதைய பாஜக அரசாங்கத்தில் மிகவும் குறைந்துவிட்டது.

“இந்தியா முழுவதும் வங்கிகளில் மொத்தமுள்ள வாராக்கடன்களில் 8.3 சதவிகிதம் மட்டுமே விவசாயம் சார்ந்ததாக உள்ளது. ஆகவே, விவசாயிகள் தங்களுடைய கடன்களை ஒழுங்கான முறையில் திருப்பிச் செலுத்துகின்றனர். ஆனால், மத்திய அரசு விவசாயத்தை விட தொழில் துறைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது” என்கிறது அறிக்கை.

“விவசாயக் கடன்கள் தள்ளுபடி என்னும் பொறுப்பை மாநிலங்களிடம் தள்ளிவிட மத்திய அரசு நினைக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி விஷயத்தில் குறைந்த முன்னேற்றமே காணப்பட்டுள்ளது” என்று ரித்தூ ஸ்வராஜ் வேடிகா அமைப்பின் நிறுவன உறுப்பினரான கிரண் விசா குற்றம் சாட்டுகிறார்.

மத்திய அரசு அறிவித்த 23 விவசாய நீர்ப்பாசனத் திட்டங்களில் நான்கு திட்டங்களின் பணிகள் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்தன. ஆனால், இவை 2017 மார்ச் மாதமே முடிந்திருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

விவசாயிகளுக்கான முன்னோடித் திட்டம் என்று பாஜக கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தால் காப்பீட்டு நிறுவனங்களே அதிகம் பயனடைந்தன. எப்படி என்றால்... விவசாயிகளிடமிருந்து பெறப்படும் காப்பீட்டுத் தொகைகளில் 55 சதவிகிதம் மட்டுமே அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படுகிறது. பல மாவட்டங்களில் காப்பீட்டுத் தொகையாக குறிப்பிட்டத் தொகையைவிட 30லிருந்து 58 சதவிகிதம் வரை அதிகமாகவே வசூலிக்கப்படுகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகமாகப் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சிறு, குறு விவசாயிகள் அனைவருமே கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், கடந்த நான்கு வருடங்களாகத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில், ஒருபகுதி கூடப் பால் உற்பத்திக்கு ஒதுக்கப்படவில்லை. மேலும், கால்நடை வியாபாரத்துக்கு அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவதே இலக்கு என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், பணவீக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது விவசாய வருமானம் தேக்கமடைந்திருக்கிறது அல்லது வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மத்திய அரசு அமைத்த ஏழாவது ஊதியக் குழு, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான அடிப்படை வருமானத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்கென சட்டப்பூர்வமான வருமான ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, புயல், பேரழிவு நிவாரணங்கள், குத்தகை விவசாயிகளுக்குக் கடன் உத்தரவாதத் தொகை, அதிகமாக மழை பொழியும் பகுதிகளில் இரட்டிப்பான பாசனத் திட்டங்களை நிறைவேற்றுதல் முதலான கோரிக்கைகளை விவசாய சங்கங்கள் விடுத்துள்ளன.

நன்றி: லைவ் மின்ட்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018