உணர்வுகளைக் கட்டுப்படுத்தினோம்!


‘பத்மாவத் படம் நீண்ட நாள்களாகச் சர்ச்சையில் சிக்கியதால், படக்குழுவினர் அனைவரும் உணர்வுகளை மனதில் அடக்கி வைத்து கொள்ள பழகி கொண்டோம்’ என்று தெரிவித்துள்ளார் நடிகர் ஷாகித் கபூர்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்மாவத் திரைப்படம் கடும் எதிர்ப்பை மீறி, கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை புரிந்துவருகிறது. இந்தப் படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதில் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபிகா படுகோனுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.
இந்த நிலையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “பத்மாவத் படம் நீண்ட நாள்களாகச் சர்ச்சையில் சிக்கியதால், படக்குழுவினர் அனைவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறைய விஷயங்களை சகித்துகொள்ள நேர்ந்தது. நிறைய விஷயங்களை இழக்க நேர்ந்தது. நிறைய தியாகங்கள் செய்ய நேர்ந்தது. மேலும், உணர்வுகளை மனதில் அடக்கி வைத்து கொள்ள பழகி கொண்டோம். குறிப்பாக அரசியல் ரீதியாக நாங்கள் சரியாக இருக்க நேர்ந்தது. இந்தப் படம் ஏராளமான தடைகளை கடந்து வெளியானது. இன்றைக்கு நாங்கள் சரியானவர்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக உணர்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “பத்மாவத் திரைப்படம் என் வாழ்க்கையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. அதே போல் படம் வெளியான இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல படங்களுக்கு நாடு எப்போதும் ஆதரவு அளிக்கும். இது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது. இந்த அன்பும், ஆதரவும் நான் எதிர்பார்த்ததைவிட அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பத்மாவத் திரைப்படம் பெருமைப்படுத்துவதால் பத்மாவத் படத்தை எதிர்க்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது.