மணப்பெண்ணின் புது கனவுகள் !

‘எனது கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் என் கணவர் ஆர்வமாக இருக்கிறார்’ என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.
தமிழில் சித்திரம் பேசுதடி, அசல், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகை பாவனா. இவரும் கன்னடத் தயாரிப்பாளரான நவீனும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாகக் காதலித்துவந்த நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொச்சியில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சில நாள்கள் கணவர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாவனா, மீண்டும் சினிமாவுக்கு நடிக்கத் திரும்பியுள்ளார்.
சமீபத்தில் ஸிஃபி இணையதளப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் நல்ல வேடங்கள் கிடைக்கின்றன. அதனால் அதுவரை தொடர்ந்து நடிப்பேன். அதேபோல் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் எதுவும் இல்லை. எனது கணவர் நவீனும் இதைத்தான் விரும்புகிறார். ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதை அவர் விரும்ப மாட்டார். எனது கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் என் கணவர் ஆர்வமாக இருக்கிறார். எனக்கும், என் கணவருக்கும் இடையே எந்த விஷயத்திலும் ஒளிவு மறைவு இல்லை. எங்களின் அனைத்து விஷயங்களையும் நாங்கள் பகிர்ந்துகொள்வோம். அதுபோல சினிமா உலகமும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்திருக்கிறது. எனவே, மலையாளத் திரையுலகை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.