மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: ரஜினி பெக்டர் (கிரேமிக்கா)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: ரஜினி பெக்டர் (கிரேமிக்கா)

வேடிக்கையாகத் தொழில் தொடங்கிய பெண் இன்று சிறந்த தொழில்முனைவோராகச் சாதித்துக் காட்டியுள்ளார். கிரேமிக்கா நிறுவனம் இன்று முன்னணி உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் ரஜினி பெக்டர் குறித்த சக்சஸ் ஸ்டோரியைக் காண்போம்.

ரஜினி பெக்டர் கராச்சியில் பிறந்தவர். ஆனால், அதிகமாக லாகூரிலியே வசித்துள்ளார். இவர் பள்ளிப் பருவத்தை முடித்த பின்னர் குடும்பமே டெல்லிக்குக் குடியேறியுள்ளது. பின்னர் அங்குள்ள மிராண்டா அவுஸ் பெண்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஆனால், கல்லூரி முடிக்கும் முன்னரே லூதியானாவில் உள்ள ஒரு தொழில் குடும்பத்தில் திருமணம் முடித்து வைக்கப்பட்டார். சிறு வயது முதலே இவர் சேவை மனப்பான்மைக் கொண்டவர். தற்போது மேலும் பரந்த மனப்பான்மைக் கொண்டவராக வளர்ந்துள்ளார். திருமணத்துக்குப் பின்னர் கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டார்.

திருமணத்துக்குப் பிறகு மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி மிகவும் பரபரப்பான குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தார். பிறகு மூன்று குழந்தைகளும் முசோரியில் உள்ள பள்ளிக்குப் படிக்கச் சென்றுவிட்டனர். இது தற்போதைய உத்தரகான்ட் மாநிலத்தின் ஒரு பகுதியாகும். டெல்லியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பிரதேசமாகும். இதற்குப்பின்னர் ரஜினியின் ஓய்வுநேரம் மிகவும் அதிகரித்துவிட்டது. லயன்ஸ் கிளப்பில் இணைந்து சமூக சேவைப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். பஞ்சாப்பில் இந்த அமைப்பைத் தொடங்கி வட இந்தியப் பகுதிகள் முழுவதுமாக உதவிகளைச் செய்தார்.

இதற்கு முன்னர் லூதியானாவில் ரெட்கிராஸ் என்ற பெண்கள் அமைப்பிலும் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இந்த அமைப்பில் செயலாளராகவும், பின்னர் இரண்டு ஆண்டுகள் தலைவராகவும் விளங்கினார். இவ்வாறு தொடர்ந்து ஏதேனும் வகையில் செயல்பட்டுக்கொண்டே இருந்துள்ளார். சமையலிலும் ரஜினி பெக்டருக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. சமையல் கலையை மேலும் கற்றுக்கொள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தார்.

வீட்டிலும் இவருடைய சமையலுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. மதிய உணவுக்கும், மாலை தேநீருக்கும், இரவு விருந்துக்கும் நண்பர்களையும், உறவினர்களையும் அழைப்பதை ஆரம்ப காலத்தில் வழக்கமாகவே கொண்டிருந்தார். இவர் வீட்டில் தயாரித்துக் கொடுத்த ஐஸ்க்ரீம், கேக்குகள் மற்றும் தின்பண்டங்கள் வீட்டுக்கு வந்து உண்டவர்களிடையே இவருக்கு மதிப்பைக் கூட்டியது. இவருடைய கைப்பக்குவம் அனைவருக்கும் பிடித்துள்ளது. சில நாள்களில் அப்பகுதி மக்களிடையே ரஜினி பெக்டரின் சமையல் சுவை பேசுபொருளானது. பலரும் தொழில் தொடங்க வலியுறுத்தினர். இவர் தயாரிக்கும் சுவைமிக்க உணவுப் பொருள்கள் வியாபாரத்தில் சிறப்பான வரவேற்பை அளிக்கும் என நம்பிக்கையளிக்கத் தொழில் தொடங்க ரஜினியும் முடிவெடுத்தார்.

இருப்பினும் தொழில் வெற்றியடையுமா என்ற பயத்துடனேயே தொடங்கினார். முதன்முதலில் 1978ஆம் ஆண்டு ரூ.20,000 முதலீடு செய்து கோதியில் ஐஸ்க்ரீம் தயாரிப்புத் தொழில் தொடங்கினார். இவருக்கே மிகவும் மிகவும் ஆச்சர்யமளிக்கும் வகையில் இவருடைய ஐஸ்க்ரீம் மக்களுக்கு மிகவும் பிடிக்க, தொழில் ஏற்றம் கண்டது. தற்போது பெரிய பெரிய ஆர்டர்கள் பிடித்து வர்த்தகத்தை மேம்படுத்தியுள்ளார். திருமண ஆர்டர்கள் பிடித்து வியாபாரம் செய்தார்.

வர்த்தகம் மேம்பட மேம்படக் கல்லூரி முடித்த தனது மகன்களும் ரஜினியுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தனர். ஆனால், இவர்கள் இணைவதற்கு முன்னரே வர்த்தக மதிப்பைக் கோடிகளுக்குக் கொண்டுசென்று சாதித்தார் ரஜினி. ஒருகட்டத்தில் இவருடைய கணவரும் ரஜினியுடன் தொழிலில் இணைந்தார். அனைவரும் இணைந்து வர்த்தகத்தை வேகமாக உயர்த்தினர். ஐஸ்கிரீம் மட்டுமின்றி மற்ற உணவுப் பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினர். ஆண்டு விற்றுமுதல் ரூ.20 கோடியை எட்டியது.

1995களில் மெக் டொனால்டு இந்திய சந்தையில் நுழைந்தது. இந்த நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைந்தபோது உள்ளூர் சப்ளையர்களை எதிர்பார்த்தது. இது ரஜினியின் நிறுவனத்துக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. மெக் டொனால்டு நிறுவனத்துக்கு ரொட்டிகள் தயாரித்து வழங்கும் ஆர்டர் கிடைத்தது. இவருடைய தயாரிப்பு அதிக தரமாக இருந்தது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் இவரிடம் ஆர்டர் கொடுத்தன. இதில் பல பன்னாட்டு நிறுவனங்களும் அடங்கும். கிரேமிக்கா நிறுவனத்தின் முதல் ஆலை பஞ்சாப் பிலூரில் அமைக்கப்பட்டது. கிரேமிக்கா நிறுவனத்தின் ரொட்டிகள் சன்ஃபீஸ்ட் மற்றும் கேட்பரி நிறுவனங்கள் வாங்கின.

கிரேமிக்கா நிறுவனத்தின் பிஸ்கட் தயாரிப்புகளுக்கு மிஸ் பெக்டர் கிரேமிக்கா ஃபுட்ஸ் என்று பெயரிடப்பட்டது. தற்போது மும்பை மற்றும் நொய்டாவில் இந்நிறுவனத்துக்கு ஆலைகள் உள்ளன. சிறுதொழிலாக ரஜினியின் கைகளால் தயாரித்து விற்கப்பட்ட உணவுப்பொருள்கள் இன்று மிகப்பெரிய ஆலைகளில் நவீன இயந்திரங்களைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் மிக வேகமான வளர்ச்சி கண்டுள்ளது. 2006ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.100 கோடி விற்றுமுதலை எட்டியது. ஆண்டுக்கு 30 சதவிகித வளர்ச்சியைத் தோராயமாக இந்நிறுவனம் கண்டது. 2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.800 கோடியாக அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கணக்குப்படி இந்நிறுவனத்தில் 6,000 பேர் வரை பணிபுரிகின்றனர். சிறு வியாபாரம் பெரு வர்த்தகமாக இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது. ரஜினி பெக்டரின் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் தாண்டி வேறெந்த பெரும் காரணத்தையும் கிரேமிக்கா நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணமாக கூற இயலாது. இந்தியத் துணைக்கண்டத்தின் பெண் தொழில்முனைவோரில் குறிப்பிடத்தக்க சாதனையாளர்கள் பெயரில் தன் பெயரையும் வரலாற்றின் பக்கங்களில் பொறித்து வைத்துள்ளார் ரஜினி பெக்டர்.

-பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

நன்றி:

தி வீக் எண்ட் லீடர்

சிலைட் சேர்

கிரேமிக்கா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 4 பிப் 2018