மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை!

பிரதமர் மோடி இன்று பெங்களூரு வருகை!

பெங்களூருவில் இன்று (பிப்ரவரி 4) நடைபெறவுள்ள பரிவர்த்தனா யாத்ரா பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து, மகதாயி நதிநீர் பிரச்னை தொடர்பாகப் போராடிவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பு, இன்று கறுப்பு தினம் அனுசரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மாநில தலைவருமான எடியூரப்பா, மாற்றத்துக்கான பயணம் என்ற பொருளில் பரிவர்த்தனா யாத்ராவை நடத்திவந்தார். இந்தப் பிரசாரப் பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி கர்நாடகா மாநில பாஜக ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டம், இன்று மாலை பெங்களூரு பேலஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருப்பதால், அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, மகதாயி நதிநீர் பிரச்னையையொட்டி பெங்களூரு நகரில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்குச் சில கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. பிரதமர் வரும் நேரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்குக் கர்நாடகா பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென, சம்பந்தப்பட்ட கன்னட அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரான வாட்டாள் நாகராஜிடம் வேண்டுகோள் விடுத்தார் பாஜக தலைவரான ஜெகதீஷ் ஷட்டர். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. இந்த நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றம் முழு அடைப்பு போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.

ஏற்கெனவே, கடந்த 25ஆம் தேதியன்று மைசூர் பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்ட போதும் கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மனவருத்தம் அடைந்த பாஜகவினரை, இந்த அறிவிப்பு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளநிலையில், மோடியின் பங்கேற்பு பாஜகவுக்கு வலுவூட்டும் என்று நம்புகிறது கர்நாடகா மாநில பாஜக.

இதுகுறித்துப் பேசிய எடியூரப்பா, “ஞாயிற்றுக்கிழமையன்று பந்த் நடத்த வேண்டிய காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இதிலிருந்தே தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் சதியை முறியடிப்போம்” என்று கூறினார். மேலும், மகதாயி நதிநீர் பிரச்சனை சம்பந்தமாக இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி எதுவும் பேசமாட்டார் என்றும், கர்நாடகா மாநிலத்துக்குப் புதிய நலத்திட்டங்கள் எதுவும் அறிவிக்க மாட்டார் என்றும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மோடியைப் பார்க்க திரளும் தொண்டர்களைத் தடுப்பதற்காக, கர்நாடகா காங்கிரஸ் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளதாகச் சந்தேகம் தெரிவித்துள்ளார் எடியூரப்பா. இதைச் சமாளிப்பதற்காக, மோடியின் புகழைப் பரப்பும் விதத்தில் 100 தொழில்நுட்பவியலாளர்களைப் பயன்படுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய பொதுக்கூட்டத்தில் 3-4 லட்சம் பாஜக தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

பிரதமர் வருகையையொட்டி, இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக அறிவித்துள்ளது கன்னட அமைப்புகள் கூட்டமைப்பு. பேலஸ் மைதானத்தின் வெளியே பக்கோடா விற்பனை செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 4 பிப் 2018