சாய் பல்லவி படம் ரிலீஸ் ஆகுமா?


லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘கரு’ படத்தின் தலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘வனமகன்’ திரைப்படத்தை அடுத்து ‘கரு’ எனும் தலைப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் இது. ‘கருவில் கலைக்கப்பட்ட குழந்தைக்கும் தாய்க்குமான உறவை’க் கதைக்களமாகக் கொண்ட திகில் படம் என ட்ரெய்லரின் காட்சிகளைப் பார்த்தாலே தெரிகிறது. பிரேமம், கலி போன்ற மலையாளப் படங்களிலிலேயே சாய் பல்லவியைப் பார்த்துவந்த ரசிகர்கள் முதன்முதலாகத் தமிழில் பார்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புப் படத்துக்கு மதிப்பைக் கூட்டியிருந்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 23 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த, இந்தப் படத்துக்கு ‘கரு’ என பெயரிடக் கூடாது என தடை விதிக்ககோரி ஜே.எஸ்.ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் அதிபர் மதிமாறன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். கரு என்னும் தலைப்பை தாம் ஏற்கெனவே பதிவு செய்து வைத்துள்ளதாகவும், இத்தலைப்பைப் பயன்படுத்தி லைகா நிறுவனம் திரைப்படத்தைத் தயாரித்து வருதாகவும் உயர் நீதிமன்றத்தில் தடை விதிக்க கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் அவர்கள் லைகா நிறுவனத்திடம் பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டதுடன், ‘கரு’ என்னும் தலைப்பைப் பயன்படுத்த இரண்டு வார காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.