மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

தேர்தல் நிதி பத்திரம் ஊழலைச் சட்டபூர்வமாக்கும்!

தேர்தல் நிதி பத்திரம் ஊழலைச் சட்டபூர்வமாக்கும்!

தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இதுகுறித்து நேற்று பேட்டியளித்த யெச்சூரி, “தேர்தல் நிதி பத்திரம் ஊழலைச் சட்டபூர்வமாக்கும்; கட்சிகளுக்கும் கார்ப்பரேட்டுக்கும் இடையிலான வணிக உறவை மேலும் பலப்படுத்தும்” என்று கூறினார்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் நிதி பத்திரத்தைப் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக ரூ.2000 வரை மட்டுமே ரொக்கமாக வழங்க முடியும் என்றும், அதற்கு மேல் நிதியளிக்க உதவி செய்யும் வகையில் தேர்தல் நிதி பத்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட வங்கிகளில், குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே தேர்தல் நிதி பத்திரங்கள் கிடைக்குமென்றும், இதன் மூலமாக நிதியளித்தவர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் நிதி பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறி, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இது தொடர்பாக, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம்.

இந்த விவகாரம் குறித்து, நேற்று (பிப்ரவரி 3) பத்திரிகையாளர்களிடம் பேசினார் சீதாராம் யெச்சூரி. அப்போது, பாஜகவும் காங்கிரஸும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நன்கொடை பெறுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தம் கொண்டு வந்ததன் மூலமாக, பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் வழக்குகளில் இருந்து தற்காத்துக்கொண்டன என்று தெரிவித்தார்.

“தேர்தல் நிதி பத்திரங்கள் அபாயகரமானது. இதன் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும், எந்தக் கட்சிக்கும் நிதியளிக்கலாம். அந்தத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். இதன் மூலமாக, தேர்தல் நிதி பத்திரம் ஊழலை சட்டபூர்வமாக்கும்; கார்ப்பரேட்டுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான வணிக உறவை மேலும் பலப்படுத்தும்” என்றார். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர் கூறினார்.

“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில், காங்கிரஸும் பாஜகவும் தங்களது கொள்கைகளை வடிவமைத்துக் கொள்கின்றன. எனவே, கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிப்பதைத் தடை செய்ய வேண்டும். இவ்வாறு நிதி பெறுவதால், அந்த நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தங்களது கொள்கைகளை மாற்றுகின்றனர். இதுதான் ஊழலின் தொடக்கம். கார்ப்பரேட் நன்கொடை இருக்கும் வரை, ஊழலை ஒழிக்க முடியாது” என்று தெரிவித்தார் யெச்சூரி.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 4 பிப் 2018