மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: திரைக் கடலில் தனித்து மிதக்கும் தாமரை

சிறப்புக் கட்டுரை: திரைக் கடலில் தனித்து மிதக்கும் தாமரை

தினேஷ் பாரதி

தமிழ் சினிமாவுலகில் பெண் பாடலாசிரியர்களின் முன்னோடி யார் என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். ஆமாம். அவர் வேறு யாரும் இல்லை. நம்ம டி.ஆரின் (டி.ராஜேந்தர்) பாட்டியான டி.பி. ராஜலெட்சுமிதான். அதுவும் வெறும் பாடலாசிரியர் மட்டுமல்ல. சினிமா ராணி என்று சொல்லுமளவுக்கு கதை, வசனம், நடிப்பு, பாடல்கள் என எழுதியதோடு ‘மிஸ் கமலா’ என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.

இவரிடமிருந்தே பெண் பாடலாசிரியர்களின் தலைமுறை தொடங்கியது. இவரை அடுத்து பராசக்தி படத்தில் இடம்பெற்ற ‘புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே’ உள்ளிட்ட சில பாடல்களை எழுதிய கே.பி.காமாட்சி, பட்டம்மாள், அப்புறம் குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ பாடல் எழுதிய ரோஷனாரா பேகம் (முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசியர்) என விரல்விட்டு எண்ணும்படியாகவே பெண் பாடலாசிரியர்கள் இருந்திருக்கிறார். இந்த வரிசையில் வந்திருக்கும் தாமரை, பெண் பாடலாசிரியர் சமூகத்தின் முக்கிய ஆளுமையாக இருக்கிறார்.

கல்லூரிக் காலங்களில் தாமரை எழுதிய பாடல்கள் பலவற்றைக் கேட்டிருந்தாலும் அவர் எழுதிய கவிதைகளைத் தேடி வாசிக்கவே மனம் முற்பட்டது. மதுரை டவுன் ஹால் வீதிகளில் உள்ள பழைய புத்தகக் கடைகள், ரயில் நிலையத்தின் அருகில் உள்ள புத்தகக் கடைகளில் தாமரை எழுதிய ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்’ புத்தகத்தைத் தேடி அலைந்த காலம் உண்டு.

ஒருநாள் யதேச்சையாக நண்பரின் உறவுக்காரரைப் பார்க்கச் சென்னை பயணப்பட்டோம். அவருடைய மாமா வீடும் தாமரையின் கவிதை புத்தகத்துக்கான பதிப்பகமும் தி.நகர்தான். நடேசன் பூங்கா அருகில் உள்ள குமரன் பதிப்பகத்தில் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்’ என்கிற கவிதைத் தொகுப்பு கிடைத்தது.

அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகே அவருடைய பாடல் வரிகளை ஒவ்வொரு வார்த்தையாக, ஒவ்வொரு சொற்களாக உற்று நோக்கும் பழக்கம் ஏற்பட்டது.

வசீகரித்த ஒரு பாடல்

இயக்குநர் சீமானின் இனியவளே படத்தில் இடம்பிடித்துள்ள ‘தென்றல் எந்தன் நடையைக் கேட்டது’ என்ற பாடலின் மூலமே திரையுலகில் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானாலும் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவைப் பார்த்தாயா’ பாடலே பாடலாசிரியர் வரிசையில் தாமரையையும் சேர்த்தது.

எந்த ஒரு பாடலாசிரியருக்கும் இயக்குநரைத் தாண்டி இசையமைப்பாளரோடு ஓர் அந்நியோன்யம் இருக்க வேண்டும். அப்போதுதான் வரிகள் சரளமாகக் கொட்டும். கண்ணதாசனுக்கு எம்.எஸ்.வி., வைரமுத்துவுக்கு இளையராஜா, நா.முத்துக்குமாருக்கு யுவன் ஷங்கர் ராஜா போல கூட்டணி அமையாமல் இருந்த தாமரைக்கு, சரியான இசைக் கூட்டாளியாக ஹாரிஸ் ஜெயராஜ் அமைந்தார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தில் வாலி எழுதிய பாடல்கள் ஆண்களுக்கானதாக இருந்தாலும், பெண்கள் அதிகம் முணுமுணுக்கும் பாடலாக ஒலித்தது தாமரை எழுதிய ‘வசீகரா என் நெஞ்சினிக்க’ என்னும் பாடல். பெண்ணின் அக மனதைச் சாயம் பூசாமல் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தன அந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகள்.

இந்தக் கூட்டணி காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் பணிபுரிந்து பல அருமையான பாடல்களைத் தந்தன. ஒரு படம் முழுவதற்கும் தன்னாலும் பாடல்களை எழுத முடியும் என்பதை இந்தப் படங்களில் தாமரை நிரூபித்துக் காட்டினார். இந்தப் பாடல்களின் மூலமாகவே தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவராக உருவெடுத்தார். என்னைக் கொஞ்சம் மாற்றி, உனக்குள் நானே, பார்த்த முதல் நாளே என இவரது பாடல்கள் இசையைத் தாண்டி அவற்றின் வரிகளுக்காகவே அதிகம் ரசிக்கப்பட்டன. சமகாலப் பாடலாசிரியர்கள் பலருக்குக் கிடைக்காத பெருமை இது.

அடையாளத்தை விட்டுக்கொடுக்காத தன்மை

ஒரு பாடலாசிரியர் என்பவர் தனக்கான இசையமைப்பாளரிடம் பணிபுரிந்ததால்தான் சிறந்த கற்பனைத் திறனை வெளிப்படுத்த முடியும் என்பதில்லை. எந்தவோர் இசையமைப்பாளரோடு பணிபுரிந்தாலும் தனது கற்பனையில் பழுதுபடாமல் சிறந்த பாடல்களை வெளிக்கொணர தெரிந்திருக்க வேண்டும். முன்னணி பாடலாசிரியர்கள் பலரைப் போலவே தாமரையும் மற்ற இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்தாலும் பிரகாசிக்கத் தவறியதில்லை. தனக்கான அடையாளத்தையும் விட்டுக் கொடுத்ததில்லை.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் கண்ட நாள் முதலாய் படத்துக்கு இவரே அனைத்து பாடல்களையும் எழுதினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அதில் இடம்பெற்ற ‘பனித்துளி.. பனித்துளி.. அது சுடுவது சுடுவது ஏனோ’ மற்றும் ‘மேற்கே.. மேற்கே.. சூரியன்கள் சூரியன்கள் உதிப்பதில்லை’ ஆகிய இரண்டு பாடல்களைக் கேட்கும் யாவரும் தாமரையின் கற்பனைத் திறனை பாராட்டியே தீருவார்கள். சுப்ரமணியபுரம் படத்தில் வரும் ‘கண்கள் இரண்டால்’ பாட்டிலும் தன் கற்பனைத் திறனை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

இரவும் அல்லாத பகலும் அல்லாத

பொழுதுகள் உன்னோடு கழியுமா

தொடவும் கூடாத படவும் கூடாத

இடைவெளி அப்போது குறையுமா

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்

உடலும் அல்லாத உருவம் கொள்ளாத

கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

என்ற வரிகள் காதலர்களைக் கிறங்கச் செய்தன. 80களின் காதலைச் சித்திரித்த இந்த வரிகள் புத்தாயிரத்தின் காதலர்களையும் வசீகரித்தன.

இளைஞர்களின் இசை நாயகனாகத் திகழும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல் எழுதுவதற்குக் கிடைத்த வாய்ப்பைத் தாமரை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இடம்பிடித்துள்ள மன்னிப்பாயா பாடலும், அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பிடித்துள்ள தள்ளிப் போகாதே பாடலும் அதற்கான சான்றுகள்.

மன்னிப்பாயா, தள்ளிப் போகாதே என்கிற பல்லவி வரிகள் எல்லாம் 60களிலும் 70களிலும் வெளிவந்த பாடல்களில் பயன்படுத்தப்பட்டவை. ஆனால், அவற்றையே புதுமையாக்கி எப்படி ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்கிற சூத்திரத்தை அறிந்துகொண்ட தாமரை வார்த்தைகளில் வசியம் செய்து வெற்றி கண்டிருக்கிறார். மன்னிப்பாயா பாடலில் மூன்று திருக்குறள்களைப் பயன்படுத்தியிருப்பது மற்றொரு சிறப்பு.

ஒரு பாடலானாலும் தனித்து ஒலிக்கச் செய்தல்

ஒரு படத்துக்கு முழுப்பாடலையும் எழுதி கவனத்தை பெறுபவர்களும் உண்டு. அதேபோல ஒரு சில பாடல்களை மட்டுமே எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் பாடலாசிரியர்களும் உண்டு. தாமரையும் பல படங்களுக்கு ஒன்றிரண்டு பாடல்களே எழுதினாலும் தனித்துத் தெரியும் வகையில் அவற்றை எழுதினார். சாமி படத்தில் இவர் எழுதிய ‘இதுதானா.. எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா’ என்கிற பாடல் இதற்குச் சிறந்த உதாரணம். வெளிவந்த சமயத்தில் கல்லூரிப் பெண்களால் அதிகம் மனனம் செய்யப்பட்ட பாடல் இது.

தவமின்றிக் கிடைத்த வரமே, மலர்களே.. மலர்களே.. மலர வேண்டாம், ஒரு மாலை இளம் வெயில் நேரம், மாலை மங்கும் நேரம், செந்தூரா... செந்துரா, நெஞ்சில் மாமழை போன்ற பாடல்கள் எல்லாம் அவை இடம்பெற்ற படங்களின் அடையாளமாகவே ஆகிவிட்டன.

ஆண் பெண் அக மனதை வெளிப்படுத்துதல்

பெண்ணின் அக மனதை ஆண் பாடலாசிரியர்கள் வெளிப்படுத்தினாலும் ஒரு பெண் பாடலாசிரியர் பெண்ணின் மனதை வெளிப்படுத்துவது உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். அந்தக் காரணத்தினால்தான் பெண்ணின் மனதை வெளிப்படுத்தும் விதமாக தாமரைக்கு அமைந்த பல பாடல்கள் சிறப்பாக உள்ளன.

வசீகரா என் நெஞ்சினிக்க, இதுதானா...இதுதானா, மலர்களே...மலர்களே, ஒன்றா இரண்டா ஆசைகள், அனல் மேலே பனித்துளி, இதயத்தை ஏதோ ஒன்று போன்ற பாடல்களில் பெண்ணின் அக மனதை வெளிப்படுத்தும் தன்மையைக் காணலாம்.

பெண்களின் மனதைத் தாண்டி ஆண்களின் மனதையும் பிரதிபலிக்கும் விதமாகப் பல பாடல்கள் எழுதி வெற்றிக் கண்டிருக்கிறார் தாமரை. ஒரு மாலை இளவெயில் நேரம், அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல, தள்ளிப் போகாதே, மறுவார்த்தை பேசாதே போன்ற பாடல்களைக் கேட்கும்போது தாமரையின் கவித்துவம் கூடு விட்டுக் கூடு பாய்ந்து ஆண் மனதின் உணர்வுகளைச் சொல்வதை அறிந்துகொள்ள முடியும்.

கொண்ட கொள்கையில் உறுதித் தன்மை

ஒருமுறை வாலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘நீங்கள் மெட்டுக்கு பாட்டெழுதுவீர்களா? இல்லையென்றால் பாட்டுக்கு மெட்டெழுதுவீர்களா?’ என்று. இதற்கு வாலி ‘நான் நோட்டுக்கு பாட்டெழுதுகிறேன்’ என்றார்.

அப்படியாகத்தான் கவிஞர்களை ஆக்கியிருக்கிறது தமிழ் சினிமா. நல்ல கவிஞர்களையும் பணத்தைக்காக அவர்களின் கொள்கைகளை மாற்ற வைத்துவிடும். தமிழின் ஆதிச் சொற்களையெல்லாம் தெரிந்துவைத்திருக்கும் அவர்களையும் பாடல்களை ஹிட்டாக்குவதற்காகக் கலப்புச் சொற்களைப் பயன்படுத்த வைத்துவிடும்.

தாமரை இந்த விஷயத்திலும் தனித்து நிற்கிறார். ஒருமுறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது விழா மேடையில் பேசிய தாமரை “என் பாடல்களில் ஆங்கிலச் சொற்களைக் கலக்க மாட்டேன்” என்று கூறினார். மேடை கிடைத்துவிட்டது; கைத்தட்டல்களுக்காக நாலு வார்த்தைகளைச் சொன்னோம் என்று இல்லாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று வெற்றியும் கண்டுவருகிறார் தாமரை.

சொற்களில் புதுமை

சில பாடலாசிரியர்கள் அரிய தமிழ்ச் சொற்களைப் பாடல்களில் கையாள முற்படுவர். அறிவுமதி அந்த முயற்சியைச் செய்தவர். தாமரையும் அத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

தாமரையின் பல பாடல்களில் புதுமைச் சொற்களைக் காணலாம். ‘கலாபக் காதலா, நீராம்பல் பூவே, மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்’ எனப் பல புதிய சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார் தாமரை.

பார்த்த முதல் நாளே என்னும் பாடலில் ‘என் பதாகை தாங்கிய உன் முகம்’ என்னும் வரி வருகிறது. Banner என்பதற்கான தமிழ்ச் சொல்லான பதாகை என்பது அரசியல் களத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல். அந்தச் சொல்லைக் காதல் களத்துக்குள் கொண்டுவந்து பாடலுக்கு வித்தியாசமான அழகைத் தந்திருக்கிறார் தாமரை.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 4 பிப் 2018