மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

எக்ஸாம் வாரியர்ஸ்: மாணவர்களுக்கான பிரதமரின் புதிய புத்தகம்!

எக்ஸாம் வாரியர்ஸ்: மாணவர்களுக்கான  பிரதமரின் புதிய புத்தகம்!

புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் பிரதமர் மோடி. இது பிரதமரின் ஐந்தாவது புத்தகம். மன அழுத்தம் இல்லாத அணுகுமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் எழுதும் முதல் புத்தகம்.

பென்குயின் பதிப்பகத்தால் நேற்று (பிப்ரவரி 3) வெளியிட்டப்பட்ட இந்தப் புத்தகம் மாணவர்களுக்கு மட்டுமானது அல்ல. ஒரு நல்ல மனநிலையுள்ள மாணவனை எப்படி உருவாக்குவது எனப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தன் கருத்துகளையும் மோடி இதில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புத்தகம் இ-வாசிப்புக்கான பார் குறியீடுகள் போன்ற கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. அவரின் ரேடியோ உரைகள் (mon ki baat) மற்றும் அவரின் சொந்த வாழ்க்கையில் தேர்வுகளின்போது எவ்வாறு மன அழுத்தங்களைச் சமாளித்தார் போன்ற நிகழ்வுகளை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. மன அழுத்தத்தைச் சமாளிக்க மாணவர்களை ஆக்கபூர்வமான மற்றும் உடல் ரீதியான நடவடிக்கைகளுக்கு இந்த நூல் ஊக்கமளிக்கிறது.

தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையே இந்தப் புத்தகத்தின் பல அழகான அத்தியாயங்களாக மாற்றியுள்ளார். பள்ளிப்பருவம் மட்டுமல்லாது தன் அரசியல் பயணத்தின் அனுபவங்களையும் அவர் எப்படி மாணவர்களுக்கான அறிவுரைகளாக மாற்றியுள்ளார் என்பதை சில நிகழ்வுகளில் காணலாம்.

சுய ஆய்வின் அவசியம்

மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் விதத்தைத் தாங்களே சுய ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் நடைபெற்ற நாடக ஒத்திகையின்போது குறிப்பிட்ட வசனமொன்றை பேச நான் மிகவும் திணறினேன். இதைக் கவனித்த நாடக இயக்குநர் பொறுமையிழந்துவிட்டார். தொடர்ந்து அவர் என்னிடம், இவ்வாறு வசனம் பேசினால் நாடகத்தில் நான் இடம்பெறுவது சந்தேகம் என்னும் தொனியில் பேசினார். அடுத்த நாள், நான் அவரிடம் சென்று எனது தவற்றை திருத்துவதற்கான வழிமுறை குறித்து கேட்டேன். இதையடுத்து அவர், நான் பேசி நடித்தது போன்றே நடித்துக் காட்டினார். அப்போது தான், எனது தவறு எனக்குப் புரிந்தது. அதையடுத்து, நான் அதை திருத்திக் கொண்டேன். எனவே நம் தவறுகளைப் புரிந்து அதைத் திருத்திக்கொள்வதற்கான மனப்பக்குவத்தை மாணவர்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

முன்கூட்டியே தயாராக இருப்பது முக்கியம்

ஒரு பாடத்தின் குறிப்பிட்ட பகுதிகள் குறித்து விவாதம் செய்வதன் மூலம், தேர்வின்போது அவற்றை நினைவுக்கு கொண்டுவருவது எளிதாக இருக்கும். பாஜகவில் நான் பொதுச் செயலாளராக இருந்தபோது கட்சியினர் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து ஒரே தலைப்பு குறித்து விவாதிப்போம். அதில் சிலர் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் போல் விவாதிப்பர். இதனால், நாங்கள் எந்த தலைப்பு குறித்து விவாதிப்பதற்கும் தயாராக இருந்தோம்.

2012 குஜராத் தேர்தல் குறித்து

மாணவர்கள் தேர்வு முடிந்தவுடன், மதிப்பெண் குறித்தோ, தாம் எழுதிய விடைகள் குறித்தோ தம்மைத் தாமே குழப்பிக் கொள்ளக் கூடாது. மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மாதிரி, 2012 குஜராத் தேர்தல் எனக்குத் தேர்வு போல் அமைந்தது. டிசம்பர் 2012இல் குஜராத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு சர்வதேசக் கருத்தரங்கம், நீர்ப்பாசனத் திட்ட ஆய்வுப் பணி என எனக்கு அடுத்தடுத்த வேலைகள் இருந்தன. மாணவர்களுக்கு விடைத்தாள் போல, வாக்கு என்பது எனக்கு ஒரு வழிப் பயணச் சீட்டு.

வெற்றிக்கு ஆழ்ந்த தூக்கம் முக்கியம்

தேர்வுக்குத் தயாராகும் காலங்களில் ஆழ்ந்த தூக்கம் மிகவும் முக்கியம். இந்த வயதிலும் நான் சுறுசுறுப்பாக இருப்பதற்கு நான் ஆழ்ந்து தூங்குவது தான் காரணம். பனிச்சுமைக்கு ஏற்ப குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் வரை நான் ஆழ்ந்து தூங்குவேன்.

இயற்கையுடன் இணைந்து

தேர்வுக்காக படிக்கும் சமயங்களில் சிற்சில இடைவேளை விடுவது சிறந்தது. எனது இளம்பருவத்தில் நான் நீச்சல் பழகுவது, இயற்கையை ரசிப்பது போன்றவற்றில் ஈடுபடுவேன். இதன்மூலம் என்னால் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிந்தது.

இடையூறின்றி முழு கவனத்துடன்

ஒரு செயலை செய்யும்போது நம்முடைய முழு கவனமும் அதில் தான் இருக்க வேண்டும். முக்கிய சந்திப்புகள், கூட்டத்தின்போது மொபைல்போன் உள்ளிட்டவற்றை நான் பயன்படுத்த மாட்டேன். எனது முழு கவனமும் அப்போதைய செயலில்தான் இருக்கும்.

பார்வையிழந்த கிரிக்கெட் அணியினரைச் சந்தித்தபோது

எந்நேரமும் கவலைப்படுபவர்களாக இல்லாமல், மாணவர்கள் போர் வீரர்களைப் போல் திகழ வேண்டும். 2017ஆம் ஆண்டு பார்வையிழந்தவர்களுக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. அவர்களை நான் சந்தித்தது, மறக்க முடியாத அனுபவம். தங்களது வாழ்வில் பல்வேறு தடைகளைக் கடந்த அவர்கள், பிறருக்கு உதாரணமாக, உத்வேகம் அளிக்கும் வீரர்களாக உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 4 பிப் 2018