தமிழகத்தில் பணம் கொழிக்கும் பத்மாவதி!

ஜனவரி 25 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் பத்மாவதி ரீலீஸ் ஆனது. இந்தியாவில் குறிப்பிட்ட சில வட மாநிலங்களில் எதிர்ப்பு காரணமாகப் படத்தைத் திரையிட முடியவில்லை.
இந்தியில் சுமார் 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.
இப்படத்தை வெளியிட இவர் சந்தித்த போராட்டங்களுக்குப் பலன் கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பத்மாவதி திரையிட்ட தியேட்டர்களில் குடும்பங்கள் குவிந்து பண மழை பொழிந்து பரவசப்படுத்தியிருக்கிறது. வழக்கம் போல் கடந்த வாரம் (26.01.2017) மூன்று தமிழ்ப் படங்களும் ஒரு டப்பிங் படமும் ரிலீஸ் ஆயின. இதில் பத்மாவதி குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
சென்னை, புறநகர், கோவை ஆகிய பகுதிகளில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக கடந்த ஏழு நாட்களாக ஓடியுள்ளது பத்மாவதி. தமிழ் நாட்டில் அதிகமான திரைகளை ஆக்கிரமித்த நிமிர், மன்னர் வகையறா, பாகமதி படங்கள் வசூல் செய்த மொத்தத் தொகையை விட குறைவான திரைகளில் வெளியான பத்மாவதிக்கு வசூலான தொகை அதிகம்.
முதல் வாரம் 10 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆன பத்மாவதி, இரண்டாவது வாரம் திரையிட்ட தியேட்டர்களில் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று முதல் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு வழக்கமாக பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளங்களில் விளம்பரங்கள் கொடுக்கப்படும். ஆனால், பத்மாவதி படத்திற்கு இதுபோன்று எந்த விளம்பர மெனெக்கெடல்களும் செய்யப்படவில்லை
திரையரங்குகளுக்கு விநியோகஸ்தர்கள் வழங்கும் விளம்பர போஸ்டர்கள்கூடக் குறைவான எண்ணிக்கையில் கொடுத்துப் பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டாம் என நிபந்தனையை விதித்திருந்தது விநியோகத் தரப்பு. நேற்று வெளியான ஐந்து தமிழ்ப் படங்கள் பத்மாவதி வசூலை பாதிக்காமல், ஒவ்வொரு நாளும் பத்மாவதி வசூல் அதிகரிக்கிறது என்கின்றனர் விநியோகஸ்தர், மற்றும் தியேட்டர் வட்டாரத்தினர்.