மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு!

உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு!

சிறுபான்மை சமுதாயத்தினரின் நிகழ்ச்சிகளில் பேசும் அரசியல்வாதிகள் இந்து மத நம்பிக்கைகளை இழித்துப் பேசுவதாக தற்போது பாஜக தரப்பில் இருந்து பரவலாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 2) ஆம் தேதி சென்னையை அடுத்த தாம்பரத்தில் ‘முத்தலாக் சட்டம் ஷரியத்தில் கை வைக்கும் பாஜக அரசுக்கு கண்டனப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.

மனித நேய மக்கள் கட்சியும் தமுமுகவும் இணைந்து நடத்திய இந்த பொதுக்கூட்டத்தில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவுரையாக மமக தலைவர் ஜவாஹிருல்லா பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, முத்தலாக் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர் தலித்துகள் மீதான ஒடுக்குமுறையையும் பதிவு செய்தார். “தலித்துகளைக் கோயிலுக்குள் அனுமதிக்காத கோயில் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன? எங்களை சாதி பெயரைச் சொல்லி அனுமதிக்க மறுப்பது என்பது எங்கள் மீதான ஒடுக்குமுறைதான். தீண்டாமையை கடைபிடிக்கும் கோயில்கள் ஒடுக்குமுறைய கடைபிடிப்பதற்காகத்தான் அர்த்தம். இஸ்லாமும் , கிறிஸ்துவமும் எஙக்ளைக் கட்டித் தழுவுகின்றன. ஆனால் இந்து மதம் எங்களை நிராகரிக்கிறது.எனவே கோயில்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை’’ என்று பேசினார்.

இதன் பிறகு பேசிய கனிமொழி எம்.பி,. “தந்தை பெரியார் சொல்வார், ‘ஒரு பெரிய நாடு சிறிய நாடு ஒன்றின் மீது படையெடுத்து ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்தால் நான் அந்த சிறிய நாட்டின் பக்கம்தான் நிற்பேன். அவர்களுக்காக போராடுவேன்’ என்று சொல்லுவார். அதுமட்டுமல்ல...அந்த சிறிய நாடு தன் மக்களுக்கு எதிராக நின்றால், அந்த மக்கள் பக்கம் நின்று அந்த சிறிய நாட்டை எதிர்த்துப் போராடுவேன், அதிலே சாதி வித்தியாசம் பார்த்து மக்களை ஒடுக்க நினைத்தால், ஒடுக்கப்படுகிற அந்த மக்களோடு நின்று போராடுவேன், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களிலேயே தொழிலாளர்களை ஒடுக்க நினைத்தால் அந்தத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பேன். அந்தத் தொழிலாளி வீட்டுக்குச் சென்று தன் மனைவியை ஒடுக்க நினைத்தால் அந்த பெண்ணுக்காக குரல் கொடுப்பேன் என்று.

பொது சிவில் சட்டம் பற்றி பேச்சு எழுந்தபோதே தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள், ‘நாட்டிலே எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது. பொருளாதாரப் பிரச்னைகள் இருக்கிறது. அதையெல்லாம் தீர்க்காமல் பொது சிவில் சட்டத்தில் கை வைக்க நினைத்தால், நான் சொல்கிறேன் அது குளவிக் கூட்டிலே கை வைத்தது போல் ஆகிவிடும்’ என்று எச்சரித்தார் தலைவர் கலைஞர்.

மத்தியிலே ஆளக் கூடிய அரசாங்கம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாரதிய ஜனதா தேர்தலின் போது, பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீட்டைக் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று வரை என்ன நடக்கிறது?ஒவ்வொரு நாடாளுமன்றக கூட்டத் தொடர் நடப்பதற்கும் முன்பும், அந்தக் கூட்டத் தொடரில். என்னென்ன மசோதாக்கள் கொண்டு வரப்படும் என்பது பற்றிய,’லிஸ்டு ஆஃப் பிசினஸ்’ என்று ஒரு அட்டவணை கொடுப்பார்கள். அதில் கூட அந்த மகளிர் மசோதா இடம்பெறாது.

எட்டு சதவிகிதம் கூட பெண்கள் இல்லாத அவைகளில் எத்தனையோ சட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது, பெண்களுக்கான சட்டங்களும் சேர்த்து. அதைப் பற்றி கவலையில்லை. பெண்கள் இல்லை, ஆனால் அவர்களுக்கான சட்டம் பற்றி கவலையில்லை. ஆனால் திடீரென்று நாங்கள் இஸ்லாமிய பெண்களுக்காக ஒரு சட்டத்தைக் கொண்டுவருவோம் என்று சொன்னால் நம்புவதற்கு நாங்கள் என்ன முட்டாள்களா?’’ என்று பேசினார்.

இதற்கிடையில் வன்னியரசு கோயில்களை இடிக்க வேண்டும் என்று பேசியதாக தகவல்கள் பரவின.

கனிமொழி பேசி திருநாவுக்கரசர் பேசி கடைசியில் ஜவாஹிருல்லாவுக்கு பேசுவதற்கான வாய்ப்பு இரவு 9.55 க்குதான் கிடைத்தது.

அப்போது பேசிய ஜவாஹிருல்லா, “எனக்கு விரிவாகப் பேச நேரம் இல்லை. ஆனாலும் விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவின் பேச்சுக்கு இந்த மேடையிலே விளக்கம் சொல்ல வேண்டிய கடமை எனக்கும், எனது இயக்கத்துக்கும் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் சொன்ன கருத்தில் ஒன்றில் நானும், இந்த கூட்டமும் முரண்படுகிறோம். எங்களைப் பொறுத்தவரை பள்ளிவாசல்களும் பாதுகாக்கப்பட வேண்டும், திருக்கோயில்களும் பாதுகாக்கப்பட வேண்டும், சர்ச்சுகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

திருக்குரான் இதுபற்றி, ‘லக்கூம் தீனக்கும் வலியத்தீன்’ என்று தெளிவாகச் சொல்கிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், ’உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு’ என்று தெளிவாகத் தெரிவிக்கிறது. எனவே நாங்கள் அடுத்த மதத்தைப் பற்றி இழிவு செய்ய மாட்டோம்’’ என்று பேசினார் ஜவாஹிருல்லா.

நாம் வன்னியரசுவைத் தொடர்புகொண்டு, ‘கோயில்களை இடிப்போம் என்று பேசினீர்களா?’ என்று கேட்டோம்.

“எங்களை அனுமதிக்காத கோயில்கள் இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன என்றுதான் பேசினேனே தவிர இடிப்போம் என்று பேசவில்லை’’ என்று விளக்கம் தெரிவித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018