கலைமாமணி விருது: தமிழக அரசுக்குக் கோரிக்கை!


எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கின்ற கலைமாமணி விருதுகளை வழங்கி கலைஞர்களை கவுரவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் கோரிக்கை வைத்துள்ளார்.
கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் சார்பில் இதுவரை வழங்கப்பட்டுவந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் திரையுலகத்தையும் திரைப்படக் கலைஞர்களையும் தமிழக அரசு புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டது. இதையடுத்து தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமி அரசு, கடந்த பல ஆண்டுகளாகத் தரப்படாமலிருந்த திரைப்பட விருதுகளை ஒரே நாளில் அறிவித்தது. ஆனாலும் எட்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள பலதரப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் ”கலைமாமணி” விருதினை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துவந்தனர்.