மடியில் கனமில்லை:அமைச்சர் தங்கமணி!


“நிலக்கரி கொள்முதலில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை, மின்துறையை பொறுத்தவரையில் எத்தகைய விசாரணைக்கும் தயார்” என்று தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவி வகித்தபோது, தமிழக மின் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில், ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எளிதில் யாரும் கண்டறிய முடியாத வகையில், நிலக்கரியில் தரத்தை அடிப்படையாக கொண்டு மிக நுட்பமாக ஊழல் நடைபெற்றதாகவும் குறிப்பாக, கொள்முதல் செய்வது C கிரேடு நிலக்கரி என்றால், அது A கிரேடு நிலக்கரி போல் கணக்கு காண்பிக்கப்பட்டு, முறைகேடு நடைபெற்றதாகவும் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் இன்று(பிப்ரவரி 3) தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிலக்கரி கொள்முதலில் ஊழல் என்பது குறித்தான கேள்விக்கு பதிலளிக்கையில், கொள்முதல் செய்யப்படும் நிலக்கரியைப் பொறுத்தவரை பல்வேறு அளவுகோல்களில் தரம் சோதிக்கப்படுவதாகவும், தரத்தில் குறைவு இருந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து நஷ்டஈட்டைப் பெற்றிருப்பதாகவும் தங்கமணி கூறினார்.
தொடர்ந்து பேசும்போது, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவான விலைக்கே தமிழகம் நிலக்கரியை கொள்முதல் செய்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், மகாரஷ்டிரம் 116 ரூபாய்க்கு நிலக்கரி வாங்கிய போது, தமிழகம் 92 ரூபாய்க்கு வாங்கியுள்ளது என்று ஒப்பிட்டுக் காட்டினார்.