மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

இந்து அறநிலையத்துறையை ஒழித்துக்கட்ட வேண்டும்!

இந்து அறநிலையத்துறையை ஒழித்துக்கட்ட வேண்டும்!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு சிவன் – பார்வதியின் கோபமும், ஞானிகளின் சாபமுமே காரணம் என்று கூறினார் மதுரை ஆதீனம். மேலும், இந்து சமய அறநிலையத்துறையை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டுமென்று குறிப்பிட்டார்.

மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் கோவில் கிழக்குக் கோபுர வாசலில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. நேற்று (பிப்ரவரி 2) இரவு இந்த வீதியிலுள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டு, அது மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனால் கிழக்கு கோபுர வாசல் முழுவதும் தீப்பற்றியது; அங்குள்ள கடைகள் முழுமையாகச் சேதமடைந்தன. தீயணைப்புத்துறையினரின் கடும் முயற்சிக்குப் பிறகே, தீ அணைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, இன்று பத்திரிகையாளர்களிடம் பேசினார் மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதியாக இருந்துவரும் அருணகிரிநாதர். திருஞானசம்பந்தரால் வழிபடப்பட்ட மதுரை மீனாட்சி கோவிலில், தீ விபத்தினால் ஆயிரங்கால் மண்டபம் சேதமுற்றதாக வருத்தம் தெரிவித்தார். ”சிவபெருமான் – பார்வதி தேவியாரின் பயங்கர கோபமும் ஞானிகளின் சாபமும் தான், இந்த தீவிபத்துக்குக் காரணம்” என்றார்.

“உலகில் இந்து என்கிற பெயரே கிடையாது. சைவ, வைணவ சமயங்கள் இருக்கிறதே தவிர, இந்து சமயம் என்ற ஒன்றில்லை. தேவாரம், திருவாசகம், சைவ சித்தாந்தங்களில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. அதனால், அரசாங்கத்தில் இருந்து இந்து அறநிலையத்துறையை ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “தீவிபத்துக்கும் அதிமுக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆட்சி ஒழுங்காக நடந்துகொண்டிருக்கிறது. துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்றால் என்ன செய்ய முடியும்? நான் பொறுப்பில் இருந்தால், உடனடியாக இந்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பேன். குறிப்பகா, வணிக வளாகங்களாக ஆலயங்கள் ஆக்கப்படக்கூடாது” என்றார்.

தொடர்ந்து, தமிழக அரசு அறநிலையத்துறை செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசினார். “அறநிலையத்துறையில் பணியாற்றுகிற ஆணையர்களுக்கு, கோவில்கள் குறித்தோ, ஆதீனம் குறித்தோ, மடம் குறித்தோ எதுவும் தெரிவதில்லை. சைவமும் வைணவமும் என்றால் என்னவென்று தெரியாது. அவர்களது அணுகுமுறைகளில் பக்தி கிடையாது. இதனால் தான் அறநிலையத்துறையில் பணியாற்றுவதற்கு முன்பு, அவர்களுக்குப் பயிற்சி வழங்க கல்லூரி தொடங்க வேண்டுமென நீண்டகாலமாகச் சொல்லி வருகிறோம்.

கோவில்களில் பணம் கொடுத்து ரசீது வாங்கினால்தான், சன்னதி முன்பு தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, கோவில்களில் தரிசன கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார் மதுரை ஆதீனம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 3 பிப் 2018