தமிழகத்துக்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், அலங்கார அறிவிப்புகளைக் கொண்ட பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடுநிலையுடன் கூடிய வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 49ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. டெல்லி தமிழ்நாடு வைகை இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி எங்களுக்கு வரவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசின் மூலம் ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கு வரவேண்டிய நிதியும் இன்னும் வரவில்லை. ஜிஎஸ்டியால் தமிழகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான இழப்பீட்டுத் தொகையும் தமிழகத்துக்கு இன்னும் வரவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.