மணிரத்னம் படத்திலிருந்து பகத் பாசில் விலகல்?


மணிரத்னம் படத்திலிருந்து பகத் பாசில் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் பிரம்மாண்ட நட்சத்திரக் கூட்டணி அமைந்துள்ளது. விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு, பகத் பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்தக் கூட்டணியில் சமீபத்தில் காற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் இணைந்துள்ளார். ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளது. நடிகர்களுக்கு ஒத்திகையும் நடைபெற்றுவருகிறது. படத்திற்காக சிம்பு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது. இந்நிலையில் படத்திலிருந்து பகத் பாசில் சம்பளம் தொடர்பான பிரச்சினை காரணமாக விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே அவர் விலகியுள்ளதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மலையாளத் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம்வரும் பகத் பாசில் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்துவருகிறார்.