மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

சிறப்பு பார்வை: திருவண்ணாமலையில் கருக்கலைப்பு - அரசு நடவடிக்கை!

சிறப்பு பார்வை: திருவண்ணாமலையில் கருக்கலைப்பு - அரசு நடவடிக்கை!

திருவண்ணாமலையில் கருக்கலைப்பு அதிகமாக நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய மருத்துவக் குழுவினர் அங்குள்ள ஸ்கேன் சென்டர்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வுகளில் உரிய அனுமதியின்றி கருகலைப்பு செய்வதாக ஒரு மருத்துவமனைக்கும் மற்றும் 3 ஸ்கேன் மைய அறைகளுக்கும் மத்திய மருத்துவக்குழுவினர் சீல் வைத்தனர்.

கருக்கலைப்பு புகார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டவிரோதமாக அதிகளவில் கருக்கலைப்பு நடைபெறுகிறது. இந்த கருக்கலைப்பில் போலி மருத்துவர்களும் அதிகமாக ஈடுபடுவதாகவும் மத்திய சுகாதாரத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இம்மாவட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. இதில் நகர்ப் பகுதிகளில் மட்டும் 15 முதல் 20 ஸ்கேன் சென்டர்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த ஸ்கேன் சென்டர்களில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு நடப்பதாக டெல்லி மருத்துவக் குழுவினருக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

மத்தியக் குழு ஆய்வு

டெல்லி குடும்ப நலத் துணை இயக்குனர் அஜய்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய மருத்துவக் குழுவினர், திருவண்ணாமலையில் உள்ள ஸ்கேன் சென்டர்களில் 2 நாளாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இம்மாவட்டத்தில் உள்ள ரமணா ஸ்கேன் செண்டர், மற்றும் தீபம் ஸ்கேன் செண்டர் உள்ளிட்ட பல ஸ்கேன் சென்டர்களில் இக்குழு சோதனை செய்தது. கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 1) காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை மாலை 5 மணிவரை நீடித்தது. இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த 2 ஸ்கேன் சென்டர்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் (பிப்ரவரி 2) ஸ்கேன் சென்டர்களில் உள்ள பதிவேடுகள், ஸ்கேன் எடுத்தவர்களின் விவரம் மற்றும் ஸ்கேன் கருவியின் ‘மெமரி டிஸ்க்’கில் பதிவாகியிருந்த தகவல்களையும் ஆய்வு செய்தனர். இந்தச் சோதனையின்போது, சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருவில் உள்ளது பெண் குழந்தையா எனக் கண்டறிந்திருப்பது தெரியவந்தது. சுகாதாரத் துறையின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட அந்த 2 தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதன்பின், அங்குள்ள புவனேஸ்வரி மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அம்மருத்துவமனை மருத்துவர் செல்வாம்பாள் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

அம்மருத்துவமனையிலிருந்து 500க்கும் மேற்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்களுடன், கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் ஊசி, மருந்து, மாத்திரைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் சிகிச்சைக்கு வந்திருந்த பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அங்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்புகள் நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் புவனேஸ்வரி மருத்துவமனைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மருத்துவ நலப்பணிகளுக்கான துணை இயக்குனர் நவநீதம் தனலட்சுமி என்பவர் மருத்துவர் செல்வாம்பாள் மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, மருத்துவர் செல்வாம்பாள் மீது கர்ப்பிணிகள் சிகிச்சை சட்டம் 1971 ஏ (3) உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

பெண் சிசுக் கொலை

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் சராசரி பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 943 ஆகும். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கு 872ஆகக் குறைந்து காணப்பட்டது. ஒரு காலத்தில் பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதைக் கள்ளிப்பால் கொடுத்துக் கொன்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அந்தச் சிசுவை அழிக்கும் சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுவந்தனர்.

இவ்வாறு பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்துவருவதை மருத்துவர்கள் உறுதி செய்து, கருவில் பெண் சிசுக்கொலை செய்யப்படுவதை தடுக்கும் சட்டம் கொண்டுவரும்படி மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெண் சிசுவதைத் தடுப்புச் சட்டமும் கொண்டுவரப்பட்டது.

பெண் சிசுவதைத் தடுப்புச் சட்டம் 1994இன் கீழ் அமைக்கப்பட்ட மாநிலக் குழுவினரும் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு நடக்கும் ஸ்கேன் சென்டர்களில் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள்.

முறையான ஆவணங்கள் இன்றி செயல்படும் ஸ்கேன் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கருவிலிருக்கும் குழந்தைகளின் பாலின வகையைத் தெரிவிக்கும் மற்றும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் ஸ்கேன் மையங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டரில் மருத்துவக் குழுவினர் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றிப் போலி மருத்துவரால் இயங்கிவந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து, போலி மருத்துவரைக் கைது செய்தனர். அந்தப் போலி மருத்துவர் ஒரு வருடத்திற்கு சுமார் 2000 கருக்கலைப்பு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று பரிசோதனை செய்து, அந்தக் கருவை கலைக்கவும், தவறான வழியில் கருவுற்ற பெண்கள் தங்கள் கருக்களைக் கலைக்கவும் இந்த ஸ்கேன் சென்டர்களுக்கு வருகிறார்கள். பெண் சிசுவதைத் தடுப்புச் சட்டம் 1994இன் கீழ் அமைக்கப்பட்ட மாநிலக் குழுவினரும் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்யும் ஸ்கேன் சென்டர்களில் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 3 பிப் 2018