ஷியா தலைவரின் பேச்சினால் சர்ச்சை!


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எதிர்க்கும் அடிப்படைவாத முஸ்லிம்கள் பாகிஸ்தான் அல்லது வங்க தேசம் செல்லுங்கள் என்று கூறியுள்ளார் உத்தரப் பிரதேச வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி. இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் முஸ்லிம் சமயத் தலைவர்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கை, டெல்லி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்துவருகிறது. வரும் 8ஆம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 2) உத்தரப் பிரதேச ஷியா பிரிவு வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி, ராமஜென்மபூமி தலைமை பூசாரி சத்யேந்திர தாஸை சந்தித்துப் பேசினார்.
அதன் பின், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் ரிஸ்வி. அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும், பாபர் மசூதி கட்ட முயற்சிக்கும் அடிப்படைவாத முஸ்லிம்கள் பாகிஸ்தான் அல்லது வங்க தேசத்துக்குச் செல்லுங்கள் என்று கூறினார்.
“இதுபோன்ற முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை. மதச்சார்பற்று இருப்பவர்கள் ராமர் கோவிலுக்கு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அயோத்தி இந்துக்களின் புனித பூமி; அங்கு மசூதி கட்டக்கூடாது. மசூதியின் பெயரால் ஜிகாத்தினைப் பரப்ப முயற்சி செய்பவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்பாக்தாதியைச் சந்தித்து, அவரது படையில் சேருங்கள்” என்று கூறினார்.
ரிஸ்வியின் பேச்சு மதவாதத்தினைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர் முஸ்லிம் சமயத் தலைவர்கள். ”வக்பு வாரிய சொத்துகளைச் சட்ட விரோதமாக விற்க முயற்சித்த ரிஸ்வி ஒரு குற்றவாளி. சிபிசிஐடி போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதிலிருந்து தப்புவதற்காக அவர் நாடகமாடுகிறார். அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் ஷியா உலெமா கவுன்சில் தலைவர் இப்திகார் உசைன்.