அரை பில்லியனைக் கடந்த யூ.பி.ஐ. பரிவர்த்தனை!


யூ.பி.ஐ. திட்டம் தொடங்கப்பட்டு 18 மாதங்களை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 58 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ.) 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் யூ.பி.ஐ. பரிவர்த்தனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் இணையத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வழியாக பணப் பரிவர்த்தனை செய்யலாம். ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மோடி அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.
இந்த யூ.பி.ஐ. தளத்தைப் பயன்படுத்தி ஜனவரி மாதம் 15.18 கோடிப் பேர் பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மேற்கொண்ட பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.15,571.2 கோடியாகும். 2017ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி வரையில் யூ.பி.ஐ வழியாக 40 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் டிசம்பரில் ரூ.13,144.3 கோடி மதிப்பிலான 14.54 கோடிப் பரிவர்த்தனைகளும், நவம்பரில் ரூ.9,640.6 கோடி மதிப்பிலான 10.48 கோடிப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 58 கோடிப் பரிவர்த்தனைகள் இந்தத் தளத்தின் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.72,132 கோடியாகும்.