பட்ஜெட்: அருண் ஜேட்லி ஒப்புக்கொண்டார்!

புதிய சுகாதாரத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒப்புக்கொண்டுவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ‘உலகிலேயே மிகப்பெரிய தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை மத்திய அரசு 2018-19 நிதியாண்டில் அறிமுகப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, “இந்தத் திட்டத்தின் மூலம் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ வசதி கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டம் எந்தவிதமான தடங்கல் இன்றி செயல்பட போதுமான நிதி உதவி அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “இது வெறும் ஏமாற்று திட்டம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் கருத்து தெரிவித்த சிதம்பரம், “மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள புதிய சுகாதாரத் திட்டத்துக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒப்புக்கொண்டு விட்டார். அவர் எதிர்காலத்தில்தான் இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவோம் என்று கூறியுள்ளார்” என்றும், “பணம் இல்லாமல் திட்டம் அறிவிப்பது நூல் இல்லாமல் பட்டம் பறக்கவிடுவது போன்றது” என்றும் விமர்சனம் செய்துள்ளார்.