மக்களிடம் சிக்கிக்கொண்ட தினகரன்!


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி, சோழபுரத்தில் இருந்து நேற்று (பிப்ரவரி 2) தனது மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். மாலை 4.30 மணிக்கு தினகரன் பிரசாரப் பயணம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பிற்பகல் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்ட தினகரன் சோழபுரம் பேரூராட்சிக்கு வருவதற்குள் திணறிவிட்டார். அவ்வளவு கூட்டம். மக்கள் திரளில் சிக்கிய தினகரன் மாலை 5.10க்குத்தான் சோழபுரத்துக்குள் நுழைய முடிந்தது. அவர் வரும் வரை மேடையில் கலை நிகழ்ச்சிகள் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தன.
தினகரன் திறந்த வேனில் நின்றபடி வந்தார். மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத் தொடக்க விழாவுக்கு என்று ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், வேனில் இருந்து இறங்கி அந்த மேடைக்குச் செல்லக்கூட முடியாமல் அந்தப் பகுதியே மக்கள் கூட்டத்தில் மிதந்தது. அதனால் மேடைக்கே செல்லாமல் வேனிலேயே இருந்தார் தினகரன்.
ஊருக்குள் நுழைந்தவருக்குப் பலரும் சால்வைகள், மாலைகள், கும்ப மரியாதை என்று வரவேற்பு தெரிவித்தனர்.
வாழ்த்திய விடுதலைச் சிறுத்தைகள்
சோழவரம் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அதன் நிர்வாகி, தினகரன் அருகே வந்து, ‘விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்று சொல்லி சால்வை அணிவித்தார். உடனே தினகரன் சிரித்துக்கொண்டே, ‘விடுதலைச் சிறுத்தைகளா வாங்க வாங்க நன்றி’ என்றார். இப்படியாகப் பல தரப்பினரும் தினகரனை வரவேற்றது ஆச்சர்யமாக இருந்தது. பக்கத்து ஊரான கீழமராயம் என்ற ஊரில் இருந்து அதிமுகவின் எடப்பாடி அணியினர் தினகரன் அணியில் கொத்தாகச் சேர்ந்தனர். அவர்களோடும் பேசினார் தினகரன்.
கூட்டமும் நேரமும் அதிகமாகிக்கொண்டிருந்ததால் வேனில் இருந்து இறங்கி மேடைக்குச் செல்ல முடியாமல் வேனில் இருந்தபடியே தனது பிரசாரப் பயணத்தின் தொடக்க உரையைப் பேச ஆரம்பித்தார் தினகரன்.
டெல்லியின் நிழல் அரசு
“சோழநாட்டிலே சோழபுரத்திலே எனது சொந்த மாவட்டத்திலே, சின்னம்மாவின் சொந்த மாவட்டத்திலே உங்களை எல்லாம் சந்திப்பதிலே மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது தமிழகத்தில் நடப்பது உண்மையான அம்மாவின் ஆட்சி அல்ல. இது நம்பிக்கை துரோகிகளின் ஆட்சி. மத்திய அரசை நம்பி, எம்.எல்.ஏக்களைத் தக்கவைத்துக் கொண்டு நடத்திவரும் டெல்லியின் நிழல் ஆட்சிதான் இப்போது நடக்கிறது.
இந்த ஆட்சி முடிவுக்கு வரும்போதுதான் தமிழகம் விடிவு பெறும். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் அம்மாவின் தொகுதியிலே என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தார்கள். இன்னும் சில மாதங்களில் இந்த நம்பிக்கை துரோக ஆட்சி வீழ்த்தப்படும். அப்போது உண்மையான அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க நீங்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துதான் நான் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.
அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைந்தபிறகு மீண்டும் சோழபுரத்தில் முதன்முதலாக நன்றி சொல்லும் பயணத்தையும் ஆரம்பிப்பேன்” என்று பேசினார் தினகரன்.
இன்னும் கொஞ்சம் முன்ன வாங்க...
சோழபுரத்தில் இருந்து புறப்படுவதற்கே மணி ஆறு ஆகிவிட்டது. அதையடுத்து அங்கிருந்து நகர்ந்து திருப்பனந்தாளுக்குச் சென்றார் தினகரன். அங்கே வேன் மக்கள் கூட்டத்தில் நிற்க, ‘இன்னும் கொஞ்சம் முன்ன வாங்க...’ என்று அழைத்தனர் மக்கள். உடனே தினகரன் குனிந்து டிரைவரிடம், ‘தம்பி கொஞ்சம் முன்ன போங்க...’ என்று சொல்லி வண்டியை லேசாக நகர்த்தினார். பின் அங்கே சில நிமிடங்கள் பேசினார்.
“அம்மாவின் ஆட்சி என்பது போராடிப் பெறுவதுதான். ஆனால், இன்றைக்கு அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு நம்மை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு நமது உரிமைகளை எல்லாம் தாரை வார்த்து வருகிறார்கள். இந்த மக்கள் விரோத துரோக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரத்தான், இங்கே வந்திருக்கிறேன்” என்றார்.
இப்படியாக ஒவ்வொரு பாயின்ட்டாக நின்று நிதானித்து மக்களைச் சந்தித்து தனது முதல் நாள் பயணத்தை நேற்று இரவு நிறைவு செய்தார் தினகரன். இந்தப் பயணத்துக்கு முன்பே தினகரன் சார்பில் மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் நாள் பயணத்தை மீண்டும் இன்று சுவாமிமலையில் தொடர்கிறார் தினகரன்.
செல்லும் இடங்களில் எல்லாம் தினகரனைச் சந்திக்க பெரும் திரளான மக்கள் கூடுவதை ஜெயா டிவியில் பார்த்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
- ஆரா