விஜய்க்குக் கிடைக்காத ‘விஜய் மக்கள் இயக்கம்’!


200 கோடி ரூபாய் வசூலித்ததாகச் சொல்லப்படும் மெர்சல் படத்தைவிட, விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஒருவழியாக வெளியிடப்பட்டுவிட்டது.
ரசிகர்களைச் சந்திப்பது, போட்டோ எடுப்பது, குடும்பத்தைப் பற்றி விசாரிப்பது, நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல்களை வரையறை செய்வதென ரஜினி, கமலுக்கு முன்பே தனது ரசிகர்களை ஒரு இயக்கத்துக்கான கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றியவர் நடிகர் விஜய். மெர்சல் திரைப்படத்தின் வளர்ச்சியும், அது ஏற்படுத்திய பிரச்னைகளும், தாக்கமும் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து விஜய்யைத் தள்ளி இருக்க வைத்தது. மெர்சல் ரிலீஸுக்குப் பிறகான கடும் மன உளைச்சலிலிருந்து வெளியேறி, வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை முடித்துக்கொண்டு தற்போது முருகதாஸ் படத்துக்காகத் தன்னை தயார் செய்துவருகிறார் விஜய். அதேசமயம் தனது விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளையும் முன்னெடுக்கும் விதமாக www.vijaymakkaliyyakam.in என்ற இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்.
வருகிற 4ஆம் தேதி முதல் ரசிகர்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த இணையதளம் தற்போதுவரை பரிசோதனை நிலையிலேயே இருக்கிறது. விஜய் மக்கள் இயக்க இணையதளத்தின் செயல்பாடு குறித்து, இயக்கத்தின் மேல்மட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது “இது எங்களுடைய மிகப்பெரிய கனவு. மத்த நடிகர்களுடைய ரசிகர்கள் மாதிரி, நாமளும் எப்ப பொதுசேவையில ஒருமுகமா இறங்குறது? நம்மை இணைக்க ஓர் இடம் இல்லையே என்று கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அதுக்காகவே ரொம்ப பிரஷர் கொடுத்து ரெடி பண்ணியிருக்கோம்” என்றார்.