மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் கடும் சவால்கள்!

சிறப்புக் கட்டுரை: ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் கடும் சவால்கள்!

அ.குமரேசன்

மத்திய ஆட்சியில் மாறி மாறித் தொடர்ந்து அங்கம் வகித்த திமுக, பாஜகவும் பின்னர் காங்கிரஸ் கட்சியும் மக்கள் மீது சுமத்திய பொருளாதாரக் கெடுபிடி நடவடிக்கைகளுக்குக் கைகொடுத்தது என்பதும், இங்கே அக்கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புவதாக ஸ்டாலின் சொல்லியிருப்பது, இது பற்றிய சுய ஆய்வோடும் இணைந்ததாக இருக்குமானால் நல்லது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவந்த, மக்களைக் கைவிட்ட பல நடவடிக்கைகளைத்தான் இன்று பாஜக அரசு மிக வேகமாகவும், மதவாத அரசியலைப் பயன்படுத்தும் யுக்தியோடும் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.

“இனி எந்தக் காலத்திலும் பாஜக கூட்டணி கிடையாது” என்று பேட்டியில் அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. அது, பாஜக தமிழகத்தில் எப்படியெல்லாம் மலிவான முறையில் மத உணர்வுகளையும் பகைமையையும் கிளறிவிட்டு வேர் பரப்ப முயல்கிறது என்பது பற்றிய புரிதலோடு, ஒவ்வொரு பிரச்னையிலும் கூர்மையாக வெளிப்பட்டாக வேண்டும். இதுவரையில் அப்படி வெளிப்படவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், ஏதோவொரு வகையில் தொடர்பு முயற்சிகள் நடந்ததுதான் என்று ஊடகவியலாளர்களிடையே ஓர் ஐயப்பாடு நிலவத்தான் செய்கிறது. இப்போதைய தெளிவான அறிவிப்பைத் திட்டவட்டமான செயல்பாடாக மாற்றிக் காட்டுவதில்தான் ஸ்டாலினின் அரசியல் ஆளுமை செழுமையுறும்.

மதச்சார்பின்மைத் தத்துவம் கற்றுத்தருவது போல் ஆன்மிகத்தைத் தனியாகவும் அரசியலைத் தனியாகவும் பார்க்காமல் ரஜினி தலைகீழாகப் பார்க்கிறார் என்றும், நாட்டுக்கு அது நல்லது இல்லை என்றும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. ரஜினியை ஒரு சவாலாகப் பார்ப்பதிலிருந்து அல்ல, அவரது ஆன்மிக அரசியல் எப்படிப்பட்ட சக்திகளுக்கு சாதகமான தளத்தைத் தமிழகத்தில் அமைத்துக்கொடுக்கும் என்ற கவலையிலிருந்துதான் என்பதை நிறுவுவது ஒரு முக்கியமான அரசியல் பணி.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணா பாதையே தனது பாதை என்கிறார். பெரியார் பாதையின் நீட்சிதான் அண்ணா பாதை என்றும் கூறுகிறார். உடனிருப்போர் மனம் புண்படக் கூடாது என்பதற்காக அவர்கள் கொடுக்கும் திருநீறைப் பூசிக்கொண்ட பெரியார் பண்பின் நீட்சியாக, கடவுள் உண்டு, அது ஒரே ஒரு கடவுள்தான் என்பதாகப் பொருள் தருகிற அண்ணா கோட்பாட்டைப் பார்க்க முடியுமா? சமரசங்களுக்கு அதுவே தொடக்கப்புள்ளி என்ற கவலையைப் புறந்தள்ளிவிட முடியாது. ஆகவே, அண்ணா பாதை எது, கலைஞர் பாதை எது, ஸ்டாலின் பாதை எது என்பதற்கு மாறாக, திமுக பாதை எது என்பதே நிலைநாட்டப்பட வேண்டும்.

சட்டமன்றத்தில் செயல்பாடு

இவரது அரசியல் செயல்பாடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கூர்ந்து கவனிக்கப்பட்டது. அரசின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சட்டமன்ற நடைமுறைகள் மீதே அசூயை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றன. அப்போது, மிக நுட்பமான நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தள்ளுமுள்ளு, கலாட்டா, காவல் துறையினர் நுழைவு, பேரவைத் தலைவர் இருக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர் போய் அமர்வது என்றெல்லாம் நடந்த அந்தக் கூட்டத்திலிருந்து, கிழிபட்ட சட்டையோடு வெளியே வந்து, தோளைக் குலுக்கி அந்தச் சட்டையைத் விரித்து நடந்து தன் தொண்டர்களை நோக்கி வந்தார் ஸ்டாலின். ஒரு தொலைக்காட்சி நிறுவனம் (கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி அல்ல) அதை மெதுவோட்டக் காட்சியாகத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியது. திமுக மேடைகளுக்கும் கட்அவுட் கம்பங்களுக்கும் ஒரு புதிய விளம்பரப்படம் கிடைத்தது என்று சமூக ஊடகங்களில் பலர் கலாய்த்ததோடு அது முடிந்தது.

ஆயினும், கூட்டத் தொடர்களில், பேரவைத் தலைவரின் பிடிவாதத்தால் வெளிநடப்புச் செய்த நேரங்கள் தவிர்த்து, இவரும் திமுக உறுப்பினர்களும் முக்கியமான பல பிரச்னைகளை எழுப்பியதை மறுப்பதற்கில்லை. முந்தைய கூட்டங்களிலும் திமுக இப்படிச் செயல்பட்டிருக்கிறது என்றாலும், முற்றிலும் இவருடைய செயல் தலைமையின் கீழ் இந்தச் செயல்கள் தற்போது நிகழ்வது முக்கியமானது. இது இனி தொடர்ந்து மக்களின் கவனிப்புக்கு உள்ளாகும், ஸ்டாலினின் தலைமைப் பாங்குக்கு உரைகல்லாகும்.

குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருப்பது நலம். ஆனால், அப்படியான முயற்சிகள் நடக்கத்தான் செய்தன, பலனளிக்கவில்லை என்பதால் இப்படி நேர்வழிக் கருத்தைக் கூறுகிறார் என்கிறார்கள் சில ஊடக நண்பர்கள். அதில் உண்மை இருக்கிறதா அல்லது இது அவர்களது குதர்க்கப் புத்தி வெளிப்பாடா? ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆயினும், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்து அதைக் கறாராகச் செயல்படுத்தியது பற்றிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருப்பது நியாயம்தான் என்றும் ஊடக நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று பெயர் சூட்டுமளவுக்கு இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா செய்த பழைய தேதிகள் இருக்கின்றன என்றாலும், இம்முறை அதிலிருந்து திமுக விலகி நின்றது மெச்சத்தக்கது என்றும் தெரிவிக்கிறார்கள். தொடர வேண்டிய அரசியல் பண்புதான் இது.

மதவியமும் பணவியமும்தான் அடுத்த தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய பெரிய எதிரியாக இருக்கும் எனத் தாம் கருதுவதாகக் கூறியிருப்பதோடும் இதை இணைத்துப் பார்க்கலாம். களம் உருவாகி இறங்குகிறபோது காட்சி எப்படியெப்படி மாறுமோ என்ற ஐயவினாவையும் அன்பர்கள் போட்டுவைக்கிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் விடுக்கும் சவால்கள்

“சித்தாந்த ரீதியா திமுக தன்னை பலப்படுத்திக்க வேண்டியிருக்கு. எதிர்வர்ற காலத்துக்குத் தயாராக வேண்டியிருக்கு... ரொம்ப சீக்கிரம் தமிழக மக்கள் விருப்பப்படி திமுக நிமிர்ந்து நிற்கும்” என்று ஸ்டாலின் அந்தப் பேட்டி முடிவில் கூறியிருப்பது வெறும் நம்பிக்கையாக நின்றுவிடக் கூடாது, நடப்பாகப் பரிணமிக்க வேண்டும். திராவிட இயக்கம் இங்கே முளைவிட்டபோது, மனிதர்களிடையே பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பித்த பார்ப்பனிய சித்தாந்தத்துக்கு எதிராக அன்றைய இளைஞர்கள் கொந்தளித்து எழுந்தார்கள் என்ற வலுவான முன்னுரை இருந்தது. இன்று, ஒரு பெரும் சவாலாக, நம்பிக்கையின்மையின் காரணமாகவோ, தவறான நம்பிக்கையின் காரணமாகவோ அந்தப் பாகுபாட்டுச் சித்தாந்தத்தோடு அனுசரித்துப்போகிற போக்கு இளைஞர்களிடையே காணப்படுகிறது. மேல்நிலையாக்கல் மோகவயப்பட்டிருக்கிற தலைமுறையைப் பார்க்கிறோம். கல்யாணம் முதல் கருமாதி வரையில் அந்தச் சித்தாந்தம் புகட்டிய சடங்குகள், பிள்ளைகளுக்குத் தமிழ் வாசனையற்ற பெயர்கள், இந்தித் திணிப்பு நல்லதுதான் என்ற போதனைகள், தனியார்மயமே உண்மையான முற்போக்கு நடவடிக்கை என நம்பவைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் என இந்தத் தலைமுறைகளை வளைத்திருக்கின்றன. அவற்றிலிருந்து மீட்பதற்கான இயக்கங்களோடு உணர்வுபூர்வமாக இணைந்து நடைபோடுவதே, கடந்த கால தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்கும் வழி.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]).

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 3 பிப் 2018