மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

சிறப்புச் செய்தி: ஸ்டாலினுடன் நேருக்கு நேர்!

சிறப்புச் செய்தி: ஸ்டாலினுடன் நேருக்கு நேர்!

- கள ஆய்வில் நடந்தது என்ன?

திமுக செயல் தலைவரான ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள கட்சியின் நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்து, கட்சியின் வளர்ச்சி பற்றிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக, ‘உடன்பிறப்புகளோடு கள ஆய்வு’ என்ற நிகழ்வை அறிவித்தார்.

அதன் முதல் நாளாக பிப்ரவரி 1ஆம் தேதி, காலை கோவை மாநகர் வடக்கு, மாநகர் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அன்று மாலை நீலகிரி மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்தார்.

ஆரம்பத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் அமர்ந்திருக்க... அறிமுக உரைக்குப் பின் அவர்கள் எல்லாம் அரங்கை விட்டு வெளியேறிவிட்டனர்.

இப்போது ஸ்டாலினும் நிர்வாகிகளும் மட்டும்தான். நிர்வாகிகள் உள்ளே செல்போன் எடுத்து செல்லக் கூடாது. கட்சியின் புகைப்படக் காரரைத் தவிர வேறு யாரும் படம் எடுக்கக் கூடாது, பத்திரிகையாளர்கள் உள்ளே வரக் கூடாது என்று பல கூடாதுகளுடன் இந்த கள ஆய்வு நடந்தது.

திமுகவில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஸ்டாலின் கள ஆய்வு செய்கிறார். அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதைக் கள ஆய்வு செய்ய நாமும் களமிறங்கினோம். கள ஆய்வுக்குச் சென்று புகார் பெட்டியை நிறைத்துவிட்டு வந்த சில நிர்வாகிகளிடம் பேசினோம்.

நம் கள ஆய்வின் தொகுப்பு இதோ...

துரைமுருகன் அறிமுக ஆற்றிவிட்டு அரங்கத்தை விட்டுச் சென்றபிறகு ஸ்டாலின் நாற்காலியைத் தவிர மற்ற நாற்காலிகள் அகற்றப்பட்டன. நடு நாயகமாக ஸ்டாலின் மட்டும் அமர்ந்திருக்கிறார்.

இரு மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், பகுதி, ஒன்றியச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் ஆகியோர் நிர்வாக வரிசைக்கேற்ப முன் வரிசையில் இருந்து அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

ஸ்டாலின் பேசினார்.

“நான் ஏன் கோவை மாவட்டத்தை முதல்ல வரச் சொன்னேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல்ல கோவை மாவட்டம் உள்ளிட்ட கொங்கு பகுதியில் நாம் சரியாக உழைச்சிருந்தோம்னா இன்று எதிர்க்கட்சியில இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா, திமுகவுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரா உழைச்சோம்.

மொத்தம் பத்து தொகுதியில ஒரு தொகுதிதான் ஜெயிச்சோம். யார் யார் கோஷ்டி பூசல் பண்ணீங்கன்னு எனக்கு தெரியும். சம்பந்தப்பட்டவங்களை நான் தேர்தல் முடிவுக்குப் பிறகு கூப்பிட்டுப் பேசினேன். யார் யாரிடம் பேசினேன்னு இந்தக் கூட்டத்துல இருக்கிறவங்களுக்குத் தெரியும். இனியும் அதுபோல கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் இருந்ததுன்னா, அது மாவட்டச் செயலாளரா இருந்தாலும் சரி, மாவட்ட நிர்வாகியா இருந்தாலும் சரி, பகுதிச் செயலாளரா இருந்தாலும் சரி, துணை அமைப்புகளோட நிர்வாகியா இருந்தாலும் சரி... தூக்கியடிச்சுடுவேன். தூக்கியடிக்குறதுன்னா பொறுப்புலேர்ந்து மட்டும் நீக்க மாட்டேன், கட்சியிலேர்ந்தே அடிப்படை உறுப்பினர் பதவியிலேர்ந்தே நீக்கிடுவேன். அதனால எல்லாரும் இணைந்து கட்சியை வளர்க்கப் பார்ப்போம். கட்சி வளர்ச்சியை மையமாக வைத்து நீங்க சொல்லும் யோசனைகளையும் புகார்களையும் இந்தல் பெட்டியில் போடலாம்” என்றார்.

பலர் புகார்களைப் பெட்டியில் போட்டனர். சிலர்தான் ஸ்டாலின் முன் எழுந்து நின்று தைரியமாகப் பேசினர்.

வடகோவை 22ஆவது வார்டு செயலாளர் ஜார்ஜ் எழுந்தார்.

“செயல் தலைவர் முன்னால் என்னைப் போன்ற வார்டு செயலாளர் பேசுவதே இந்தக் கட்சி எவ்வளவு பெரிய ஜனநாயகக் கட்சி என்பதற்கு அடையாளம். உங்கள் மேலயும் மக்கள் சில அபிப்ராயங்களை சொல்றாங்க தளபதி. ஒவ்வொரு தடவை கோயமுத்தூர் வரும்போதும் மாவட்டச் செயலாளர், மேல்மட்ட நிர்வாகிகளை மட்டும்தான் பார்க்கறீங்க. அடிமட்ட நிர்வாகிகளையும் பாருங்க. கார் கண்ணாடிய கூட இறக்கிவிடாமல் போகிறீங்கன்னு பப்ளிக் சொல்றாங்க.

கட்சிக்கு வர்றேன்... உண்மையா கட்சிக்கு உழைக்கிறவனை அடையாளம் கண்டு அவனுக்குப் பதவி கொடுங்க. இதோ பொங்கலூர் பழனிசாமி இருக்காரு. களப்பணியாற்றிய தொண்டனுக்கு அவர் என்ன வாங்கிக் கொடுத்தாரு? அவர் பையன் பைந்தமிழ் பாரிக்கு இளைஞரணி பதவி வாங்கிக் கொடுத்தாரு. கவுன்சிலர் சீட் வாங்கிக் கொடுத்து மண்டலத் தலைவர் பதவி வாங்கிக் கொடுத்தாரு. இன்னிக்கு அவர் சொத்து மதிப்பு என்ன? மாவட்டத்துல கட்சியோட மதிப்பு என்னன்னு விசாரியுங்க. இன்னிக்கு நானெல்லாம் உடம்பு சரியில்லாததுக்கு ஊசி போடக் கூட காசில்லாம இருக்கேன். இந்தக் கூட்டத்துக்கே பஸ்ஸுக்குக் கடன் வாங்கிட்டுதான் வந்திருக்கேன். ஆனா, திமுகவுக்கு உண்மையா உழைப்பேன்” என்று பேச ஸ்டாலின் கவனம் குவித்துக் கேட்டார்.

ஸ்டாலினைக் கவனிக்க வைத்த இன்னொருவர் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மாலதி.

“மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டா, நிர்வாகிகள் கண்டபடி ஏசுறாங்க. ஆனா, ஒரு சில நேரத்துல கட்சியோட ஆர்பாட்டத்துக்கு வர முடியலேன்னு சொன்னா, அதுக்கும் திட்டுறாங்கண்ணா... உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுல பெண்களுக்கான வார்டுகள்ல வேட்பாளரை முடிவு பண்ற அதிகாரத்தை மகளிரணிக்கு கொடுங்கண்ணா...’’ என்றார்.

இறுதியாகப் பேசிய ஸ்டாலின், “என் முன்னாடியே புகார்களை சொன்னதுக்கு நன்றி. இந்த புகார் பெட்டி என் வீட்டுக்குத்தான் போகும். நானே பிரிச்சுப் படிப்பேன். புகார்ல உண்மை இருக்குற பட்சத்தில நான் அமைச்சிருக்கிற ஓர் ஆய்வுக் குழு யார் மேல புகார் இருக்கோ அவங்க வீட்டு வாசலுக்கு வந்து நிப்பாங்க. அப்பவே முடிவு பண்ணிக்கலாம், நீங்க கட்சியில இருக்க மாட்டீங்கன்னு. அதனால இனியாவது ஒழுங்கா கட்சி வளர்ச்சிக்குப் பாடுபடுங்க” என்று உறுதியான குரலில் பேசினார். பின் அனைத்து நிர்வாகிகளோடும் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

பிப்ரவரி 1ஆம் தேதி மாலை நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம்.

இளித்துறை ராமச்சந்திரன், முபாரக் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். பேச ஆரம்பித்த ஸ்டாலின், “நீலகிரி மாவட்டத்துல கட்சியில என்ன நடக்குதுனு எனக்கு நல்லா தெரியும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி குன்னூர்ல குடும்பத்தோட வந்து தங்கியிருந்தேன். அப்பவே யார் யார் எப்படி செயல்படுகிறீர்கள்னு தெளிவா கண்டுபிடிச்சுட்டேன். அதனால யாரும் இப்ப பேச வேண்டாம். உங்க புகார்களைப் பெட்டியில போட்டுட்டுக் கிளம்புங்க. யார் மேல தப்பு இருக்கோ அவங்க வீட்டுக்கு ஆய்வுக் குழு ஆள் வரும். அப்ப தெரிஞ்சுக்குவீங்க. என் நடவடிக்கை என்னன்னு” என முடித்துக் கொண்டார்.

“ஆய்வுக் கூட்டத்துக்காக மலையிலேர்ந்து இறங்கிவந்தோம். இப்படி டப்புன்னு தளபதி முடிச்சுட்டாரே... இதுவரைககும் கொடுத்த புகார்கள் எல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியலை. இப்போ இந்த புகார் பெட்டிய நம்பிப் போடுவோம்” என்றபடியே புறப்பட்டனர் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 3 பிப் 2018