மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: தொண்டு என்னும் தவம்!

சிறப்புக் கட்டுரை: தொண்டு என்னும் தவம்!

முத்துப்பாண்டி யோகானந்த்

21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் அது. தொற்றுநோய்களின் தாக்கத்தால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருந்தது மகாராஷ்டிராவின் கட்சிரோலி கிராமம். வெறும் 20 படுக்கை வசதி மட்டுமே கொண்ட ஷோத்கிராமின் ‘மா தந்தேஷ்வரி’ மருத்துவமனையில், நூற்றுக்கணக்கில் நோயாளிகள் குவியத் தொடங்கினர். அப்போது டாக்டர் அபய் பெங்கும் அவரது மனைவி டாக்டர் ராணி பெங்கும் தங்கள் குழுவுடன் இணைந்து கொடிய தொற்றுநோயான மலேரியாவை ஒழிக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சூழலில் கிராமவாசிகளின் ஒரே நம்பிக்கை அபய் தம்பதியினர் மட்டுமே. அந்த நம்பிக்கையை அவ்வளவு எளிதாக அவர்கள் சம்பாதித்துவிடவில்லை. அதற்காக அவர்கள் வாழ்நாள்களின் பெரும்பகுதியை செலவிட்டுக் கடுமையாக உழைத்துள்ளனர்.

சேவை மனப்பான்மை பிறந்த கதை:

1950ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் தாகூர்தாஸ் - சுமன் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் அபய். தாகூர், சுமன் இருவரும் காந்தியின் மீது தீராத பற்றுக்கொண்டவர்கள். பொருளாதாரவியலாளரான தாகூர் தன் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டு அதற்கான யோசனை கேட்க மகாத்மா காந்தியை அணுகினார். அப்போது காந்தி அவரிடம், "உங்களுக்குப் பொருளாதாரம் கற்க விருப்பமிருந்தால் நம் நாட்டின் கிராமங்களுக்குச் சென்று பாருங்கள்" என்று அறிவுரை கூறினார். இதனையடுத்து தன் முடிவை மாற்றிக்கொண்ட தாகூர் இந்தியக் கிராமங்களில் பொருளாதாரம் கற்கத் தொடங்கினார்.

அபய் தன் குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை காந்தியின் சேவா ஆசிரமத்தில்தான் செலவிட்டார். அப்போது அவருக்கு காந்தி மீதும் அவரது கொள்கைகள் மீதும் ஈர்ப்பு உண்டாகத் தொடங்கியது. அதேபோல் சந்திரபூர் என்னும் கிராமத்தில் காலம்காலமாக மக்களுக்காக மருத்துவ சேவை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்தான் ராணி பெங். இதனால் ராணிக்கு சேவை மனப்பான்மை ரத்தத்திலேயே ஊறியிருந்தது.

காதல் மலர்ந்ததும் சேவை பிறந்ததும்:

அபய், ராணி இருவரும் நாக்பூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஒன்றாக முதுகலைப் பட்டம் பயின்றனர். அந்தச் சமயத்தில்தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் 1977ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் கொடிய சில நோய்களை எதிர்கொள்ள பொது மருத்துவத்தில் சில ஆய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்து, அமெரிக்காவிலுள்ள ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் 1984ஆம் ஆண்டு பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றனர். படிப்பை முடித்து நாடு திரும்பிய இருவரும் காந்திய கொள்கைப்படி கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்காகத் தங்கள் மருத்துவச் சேவையைத் தொடர முடிவு செய்தனர்.

மக்கள் சேவையில் SEARCH

அன்று முதல் டாக்டர் அபய் - ராணி தம்பதியர் பொது வாழ்வில் மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு கட்சிரோலி மக்களுக்காகச் சேவை செய்துவருகின்றனர். 1985ஆம் ஆண்டு, SEARCH என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, கிராமப்புறங்களில் உள்ள பழங்குடி மக்களுக்காகச் சேவை செய்யத் தொடங்கினர்.

உலகளாவிய அங்கீகாரம்

அந்தக் காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துவந்தது. பிறந்து ஒரு சில மாதங்களிலேயே குழந்தைகள் இறந்தவண்ணம் இருந்தன. வயிற்றுப்போக்கின் காரணமாகவே இந்த இறப்புகள் நிகழ்வதாகக் கருதப்பட்டது. இந்த மரணிப்பு சம்பவம் இவர்களை பெரும் துயரத்துக்குள்ளாக்கியது. நோயின் தீவிரத்தை உணர்ந்த இந்த தம்பதியினர் உடனடியாக SEARCH தொண்டு நிறுவனத்தின் குழுக்களை ஒன்றிணைத்து, இதற்கான ஆய்வைத் தொடங்கினர். முடிவில் 58 கிராமங்களில் நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்றுநோயின் தாக்கம் பரவியிருப்பது கண்டறியப்பட்டு, இதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்தனர். இவர்களது இந்தக் கண்டுபிடிப்பு முதலில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் WHO, UNICEF என சர்வதேச அளவில் இந்தக் கண்டுபிடிப்பினைப் பின்பற்றத் தொடங்கினர்.

மதுவிலக்குக் கொள்கை

காந்தியக் கொள்கைகளுள் ஒன்றான மதுபான ஒழிப்புக்கு எதிராக 1990ஆம் ஆண்டு தங்கள் கிராமத்தில் மதுவிலக்கு கோரி அபய் - ராணி இருவரும் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதனையடுத்து 1992ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக கட்சிரோலியில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. பெண்களுக்கான பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும்

ராணி பெங் பெண்களுக்கான மருத்துவ ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்தார். 1988ஆம் ஆண்டு இவர் நடத்திய ஆய்வில் குறிப்பிட்ட இரண்டு கிராமங்களில் 92 சதவிகிதம் பெண்களுக்கு பால்வினை நோய் இருந்ததும், அதில் வெறும் 8 சதவிகிதம் பேர் மட்டும் முறையான சிகிச்சை பெற்றுவந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர் அதற்கான ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர். 1989ஆம் ஆண்டு புகழ்பெற்ற ‘லேன்செட்’ பத்திரிகை அவர்களுக்குக் ‘கிராமப்புற இந்திய சுகாதாரத்தின் முன்னோடிகள்’ என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது.

பழங்குடியினரின் நண்பன் ஷோத்கிராம்

1993ஆம் ஆண்டு டாக்டர் அபய் - ராணி தம்பதியினர், கிராம மக்களின் உதவியுடன் கட்சிரோலி கிராமத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் ஷோத்கிராம் என்னும் சிறிய மருத்துவமனை ஒன்றை நிறுவினர். பழங்குடி மக்களுக்கென கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு தனித்தனி படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கு ஆராய்ச்சி மையம், மதுபோதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் மையம், மருந்தகம், ஊழியர்களுக்கான குடியிருப்பு, பிராத்தனை மண்டபம், சமையலறை, பார்வையாளர்கள் அறை உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டன.

விருதுகள்

மருத்துவத் துறையில் SEARCH தொண்டு நிறுவனத்துக்குக் கிடைத்த விருதுகள்:

*1994ஆம் ஆண்டு சமூக சேவைக்காக மகாத்மா காந்தி விருது

*1996ஆம் ஆண்டு இந்தியாவில் மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக சேஷாத்திரி தங்கப் பதக்கம்

*2003ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில அரசிடமிருந்து மகாராஷ்டிரா பூஷண் விருது

*2005ஆம் ஆண்டு, டைம் பத்திரிகை அபய் - ராணி தம்பதியினரை உலக சுகாதார நாயகர்கள் பட்டியலில் இணைத்து கவுரவித்தது

*2006ஆம் ஆண்டு மெக்ஆர்தர் அறக்கட்டளையின் சர்வதேச விருது

*2015ஆம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா சோஷியல் இம்பாக்ட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 3 பிப் 2018