ஜெ. சொத்துக்காகவே அம்ருதா வழக்கு: தீபக்


சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதா தொடர்ந்த வழக்கில் நேற்று (பிப்ரவரி 1) ஜெயலலிதாவின் உறவினர் தீபக் சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் சொத்துக்காகவே அம்ருதா வழக்கு தொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் தீபக்.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின், உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அம்ருதா. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஷைலஜா தன்னை வளர்த்ததாகவும், டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டால் தனது தாய் யார் என்ற உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும் அதில் கூறியிருந்தார் அம்ருதா.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயகுமாரின் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா இருவரும் பதிலளிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுபோல, தமிழக அரசும் இதுகுறித்து பதில் தெரிவிக்க வேண்டுமென கூறியிருந்தது. இந்த வழக்கில், நேற்று தன் பதிலை தாக்கல் செய்தார் தீபக்.