மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

காலநிலை மாற்றம் என்னவானது?

காலநிலை மாற்றம் என்னவானது?

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், காலநிலை மாற்றம் என்ற வார்த்தையே இல்லை என்றும், இது சூழலியல் பார்வையில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 1) மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதில், விவசாயத்தைக் காக்கும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கொண்டாடிவருகின்றனர் பாஜகவினர். இந்த நிலையில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்தவிதமான உருப்படியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை எனவும், காலநிலை மாற்றம் என்ற முக்கியமான வார்த்தையே அதில் இடம்பெறவில்லை எனவும் கூறியுள்ளது சூழலியல் சார்ந்து தமிழகத்தில் இயங்கிவரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. இதன் சார்பில் இன்று (பிப்ரவரி 2) வெளியான அறிக்கையில், பட்ஜெட் குறித்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

“நிதிநிலை அறிக்கையில் காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகள் இல்லாதது மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அதுவும் காலநிலை மாற்றத்தால் இந்தியாவின் விவசாயம் 25 சதவிகிதத்திற்கும் மேல் இழப்புகளைச் சந்திக்கும் என்கிற ஆய்வுகள் சமீபத்தில் வந்துள்ள நிலையில், அந்த வார்த்தைகூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சந்தித்துவரும் ‘காலநிலை நிகழ்வுகள்’ (climate events), குறிப்பாகப் பருவம் தப்பிய மழை, வறட்சி, புயல்கள், வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் தீவிரமடைந்துவரும் நிலையில் அதுகுறித்த பார்வை நிதிநிலை அறிக்கையில் இல்லாதது வருத்தத்திற்குரியது. இந்தியாவின் விவசாயம் காலநிலை மாற்றத்தால் பெரிய பாதிப்புகளைச் சந்திக்கும் எனச் சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வு அறிக்கை (Economic survey) தெளிவாக அறிவித்த பிறகும் காலநிலை மாற்றம் அதிக கவனம் பெறாதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

கடந்த பத்தாண்டிற்குள் பெய்த மழையின் அளவை, 1970ஆம் ஆண்டு மழைப்பொழிவுடன் ஒப்பிடுகையில், சராசரியாக 86 மில்லிமீட்டர் குறைந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வெப்பத்தின் அளவு 0.45 முதல் 0.63 டிகிரி அளவிற்கு உயர்ந்துள்ளது; திடீர் பருவ மாற்றங்களால் கோடை கால (Kharif) பயிர்களின் உற்பத்தி 7 சதவீதமும் குளிர்கால பயிர் விளைச்சல் (Rabi) 7.6 சதவீதமும் குறைந்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால், விவசாயத்தினால் கிடைக்கும் சராசரி ஆண்டு வருமானம் 25% குறையும் என்றும், தற்போது அது 78,000 ரூபாயாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, இந்தியாவின் 30% நிலப்பரப்பு அதன் தன்மை இழந்து பாலையாகிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியலுக்கான மையம். நிலம் பாலைவனமாதல் என்பது நம் நாட்டின் உணவு உற்பத்திக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் அது ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்தப் பின்னணியில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான எந்தத் திட்டமும் ஜேட்லியின் பட்ஜெட்டில் இல்லை என்றும், நம் நாடு இன்னும் புவிவெப்பமயமாதலையும் காலநிலை மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லையோ என்ற எண்ணத்தை விதைக்கிறது என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஐயம் தெரிவித்துள்ளது. விவசாயக் கடன் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற விவசாயச் சங்கங்கள் மற்றும் செயல்பட்டாளர்களின் கோரிக்கைகள் பொய்த்துள்ளதாவும் கூறியுள்ளது.

இந்தியாவில் பாசன வசதி இல்லாத நிலப்பரப்பே அதிக இழப்புகளைச் சந்திப்பதாகவும், இந்திய விவசாயத்திற்கு முக்கியமாக விளங்கப்போகும் சொட்டுநீர்ப் பாசனம், நீர் தெளிப்பான்கள்,நீர் மேலாண்மை குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

“சிறு, குறு விவசாயிகள் குறித்த இரண்டு அறிவிப்புகளைத் தவிர வேறு எதுவுமில்லை, நாட்டில் உள்ள 22,000 கிராமப்புறச் சந்தைகளை ‘கிராம விவசாயச் சந்தை’யாக மேம்படுத்தித் தரம் உயர்த்த ரூ. 2,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இத்தனைக்கும் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது சிறு, குறு விவசாயிகளே” என்று கூறும் அந்த அறிக்கை பட்ஜெட்டில் உள்ள சில நல்ல அம்சங்களையும் பட்டியலிட்டுள்ளது.

“நிதிநிலை அறிக்கையில் சில குறிப்பிடத்தக்க அம்சங்களும் உள்ளன. அடிப்படையில் காய்கறி உற்பத்திக்கு அழுத்தம் கொடுக்கிறது. உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறி பயிர்களுக்கும், மருத்துவ மற்றும் வாசனை திரவங்கள் தயாரிக்க உதவும் மூலிகைகளுக்கும் அதிக சலுகைகளை வழங்கியுள்ளது. இந்தக் காய்கறிகளை விளைவிக்கும் விவசாய உற்பத்தி நிறுவனங்களை (Farmer producer organisations) ஒருங்கிணைக்க அறிவித்துள்ள பசுமை நடவடிக்கை (Operation green) என்பது குறிப்பிடத்தகுந்த அறிவிப்பு. அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புக்குள்ளாகும் பருப்பு வகைகளும் கோடைகால பயிர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

இந்த அரசின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த முக்கியமான நடவடிக்கை, விவசாயிகள் தங்களின் உற்பத்திச் செலவைவிட அதிகமாக 50% வருமானம் வரும் வகையில் குறைந்தபட்ச கொள்முதல் விலை (Minimum support price) அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, குறிப்பிடும் வகையில் அந்த அறிவிப்பு இல்லாவிட்டாலும், அதற்கான திட்டங்களை நிதி ஆயோக் மற்றும் மாநில அரசுகள் தயாரிக்கும் என்று அறிவித்திருக்கிறது நிதிநிலை அறிக்கை” என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வரும் 2022ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களைப் பயன்படுத்தி 1,75,000 மெ.வா. மின்னுற்பத்தி நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், அதற்கான எந்தத் திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்காதது பற்றியும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. “வரும் காலத்தில் கடல் மட்டம் உயர்வதாலும், விவசாயம் பொய்ப்பதாலும், 7,500 கிலோமீட்டர் நீளம் கடற்கரை கொண்ட இந்தியாவில் உள்நாட்டு காலநிலை அகதிகளின் (Climate refugees) எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதை எதிர்கொள்வதற்கான எந்தத் திட்ட அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை” என்று தெரிவித்துள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 2 பிப் 2018