மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

இணையும் சீமான் - சரத்குமார்?

இணையும் சீமான் - சரத்குமார்?

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டினால், சாமான்ய மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று கூட்டாகத் தெரிவித்துள்ளனர் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மதுரை விமான நிலையத்தில், இன்று (பிப்ரவரி 2) இருவரும் சேர்ந்து பேட்டியளித்தபோது இதனைத் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒன்றாகச் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது யதார்த்தமான அரசியல் சந்திப்பு என்று இருவரும் தெரிவித்தனர். இருவரது பேச்சிலும் மத்திய அரசின் பட்ஜெட் குறித்த அதிருப்தி நிரம்பியிருந்தது.

மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.5 லட்சம் தரப்படும் என்ற அறிவிப்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பினார் சரத்குமார். “சாமான்ய மக்களுக்கான பட்ஜெட் இது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது சாமான்ய மக்களைச் சென்றடையுமா என்பதில் ஐயம் உள்ளது. விவசாயிகளுக்குக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றரை ஆண்டுக்குள் மத்திய அரசு தனது அறிவிப்புகளை நிறைவேற்றுமா?

ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்குவதாகக் கூறியிருக்கிறார்கள். அந்த நிதி, எந்த மாநிலத்திற்காக, எந்த வழித்தடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியெல்லாம் பட்ஜெட் அறிவிப்பில் விளக்கப்படவில்லை. சாமான்ய மக்களுக்கான பட்ஜெட் என்று சொல்லப்பட்டாலும், இதனால் மக்களுக்குப் பயன் இல்லை” என்று தெரிவித்தார் சரத்குமார்.

அவர் பேச்சினூடே தனது கருத்துகளை முன்வைத்தார் சீமான். இருவரும் மாறி மாறிப் பேசினர். ஒரு கட்டத்தில் தனது பேச்சை முடித்துக்கொண்ட சரத்குமார், சீமானுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின், இருவரும் கட்டித் தழுவிக்கொண்டனர். சரத்குமார் சென்றபின்பு, சீமான் தனது பேட்டியைத் தொடர்ந்தார்.

“மருத்துவம், கல்வி, நீர், போக்குவரத்து என எல்லாவற்றையும் தனியார்மயப்படுத்திவிட்டார்கள். மருத்துவத்தைத் தனியாரிடம் கொடுத்துவிட்டுக் காப்பீடு தருவேன் என்று சொல்வது வேடிக்கை. கல்வி நிறுவனங்களைத் தனியாரிடம் கொடுத்துவிட்டு, பேருந்துக் கட்டணத்தை இலவசமாகத் தருகிறோம் என்று சொல்வதைப் போன்றது.

மின்னணுப் பொருட்களுக்கு வரி குறைக்கவில்லை; அதில் வரும் திருகுக்கு வரி இல்லை என்று சொல்கிறார்கள். இதைப் படிக்கும்போதே சிரிப்பு வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்ற முடியுமா? அப்படி நிறைவேற்ற வேண்டுமானால், அடுத்த முறை வாய்ப்பளியுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பா இந்த பட்ஜெட்? அதற்காகத்தான் இது பயன்படப்போகிறது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று தெரிவித்தார் சீமான்.

நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் நுழைவுக்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர். இவர்களது வருகையை, சீமான் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார். தற்போது சரத்குமாரும் அதே மனநிலையைத் தனது பேச்சில் வெளிப்படுத்திவருகிறார். இந்த நிலையில், இருவரும் இணைந்து பேட்டியளித்துள்ளது அரசியல் பார்வையாளர்களால் உற்று நோக்கப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018