மீனவ மக்களுக்கு வாழ்வளிக்கும் பட்ஜெட்!


2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் விவசாயக் கடன் அட்டைத் திட்டத்தின் விரிவாக்கம் போன்ற அறிவிப்புகளால் மீனவ மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
2018-19ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் விவசாயம், மீன்வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் போதிய நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்வளர்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான எம்.எஸ்.சோதி, எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், "விவசாயக் கடன் அட்டையைப் பால் மற்றும் மீன்வளத் துறையில் விரிவாக்கம் செய்வதன் மூலம், பால் மற்றும் மீனவத் துறைகள் விவசாயத் துறையுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கமானது மீனவர்களின் கடன் தகுதிகளை மேம்படுத்த உதவும்” என்று தெரிவித்தார்.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், ஏ.கோபால கிருஷ்ணன் பிசினஸ்லைன் ஊடகத்திடம் பேசுகையில், “அடிப்படை உள்கட்டமைப்பு, காப்பீடு போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள், தரமான இனப்பெருக்க சாதனங்கள், மரபணு மேம்படுத்தப்பட்ட மீன் விதைகள் போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். விவசாயத் துறையோடு ஒப்பிடுகையில், கடன் வழங்குவதற்கான பாதுகாப்புத் திட்டம் மீன்வளர்ப்புத் துறையில் மிகவும் குறைவாகும்” என்று தெரிவித்தார்.