மருத்துவமனையில் செவிலியர் தூக்குப்போட்டுத் தற்கொலை!


நெல்லையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் இன்று தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சந்திப்பில் தனியார் கண் மருத்துவமனை ஒன்று செயல்பட்டுவருகிறது. செவிலியருக்குப் படிக்கும் மாணவிகள் ஏராளமானோர் இம்மருத்துவமனையில் பணிபுரிகிறார்கள். மருத்துவமனையிலேயே தங்குவதற்குத் தனியாக அறைகள் இருப்பதால், இங்கு ஏராளமான செவிலியர்கள் தங்கிப் பணிபுரிந்துவருகிறார்கள்.
மருத்துவமனை அறையில் தங்கியிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த உஷாமேரி (வயது18), இன்று (பிப்ரவரி 2) மதியம் தனது அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உஷாமேரியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். உஷாமேரி எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார், இவரது தற்கொலைக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா, அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.