மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

ஏழு வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த வெற்றி!

ஏழு வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த வெற்றி!

இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப்ரவரி 1) கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டியை இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியில் ஐடின் மார்க்கம், ஆண்டில் பெஹல்குவே ஆகியோர் டி வில்லியர்ஸ், ஸ்டைன் ஆகியோருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணியில் ஷிகர் தவன், ரஹானே ஆகியோரும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக யுஜ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தனர்.

கேப்டன் இன்னிங்ஸ்

முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில் தொடர்ச்சியான இடைவேளையில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. எனவே, இந்திய பந்து வீச்சாளர்கள் கை ஓங்கி இருந்தது. விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்து வந்தாலும் கேப்டனாக பொறுப்புடன் விளையாடிய ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் சதம் அடித்து அணி நல்ல ஸ்கோரினை எட்ட உதவினார்.

தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களைச் சேர்த்தது. டூ ப்ளஸிஸ் 120 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், சஹல் இரண்டு விக்கெட்டுகளையும், பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அவசரத்தால் ஆட்டமிழந்த வீரர்கள்

270 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா நிதானமாக விளையாட முயற்சி செய்தார். ஆனால், அவர் அதைப் பின்பற்ற தவறி அதிரடியைப் பின்பற்ற முயற்சி செய்யும்போது மோர்னி மோர்க்கல் வீசிய பந்து பேட்டின் சரியே படாமல் மேலே எழும்பியது. அதை டி காக் அழகாக கேட்ச் பிடித்து ரோஹித் ஷர்மாவை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர் தவனுடன் சேர்ந்த கேப்டன் கோலி சிறப்பாக விளையாடினார். தவன் அதிரடியாக விளையாட மறுமுனையில் இருந்த கோலி நிதானமாக விளையாடி வந்தார். ஆனால், கோலியின் அவசரத்தால் தவன் ரன் அவுட் ஆகி 35 ரன்களுடன் வெளியேறினார்.

வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜோடி

அதன்பின்னர் இந்திய அணியின் கேப்டனுடன் ஜோடி சேர்ந்த அஜிங்க்யா ரஹானே இந்திய அணியில் அவரது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்து கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். இந்திய அணியில் கடந்த சில தொடர்களாக இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரஹானே அவரது இடத்தை தக்கவைத்துக் கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை சரியே பயன்படுத்தி வருகிறார். அதன்படி கடைசி டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய அவர் நேற்றைய போட்டியிலும் திறனை வெளிப்படுத்தினார். எனவே, விராட் கோலி மற்றும் ரஹானே ஜோடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இந்த ஜோடியைப் பிரிக்க தென்னாப்பிரிக்க அணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக தொடக்க வீரர் மார்க்கம், ஜே.பி.டுமினி ஆகியோர் பந்து வீசினர். இருப்பினும் நிலைத்து நின்று விளையாடிய இருவரும் 181 பந்துகளில் 189 ரன்களைச் சேர்த்தனர். 79 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரஹானே ஆட்டமிழந்தார்.

சதம் விளாசிய விராட்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவரது 33ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கோலி 112 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மஹேந்திர சிங் தோனி மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் வெற்றிக்குத் தேவையான ரன்களை பெற்றுத் தந்தனர். 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 45.3 ஓவரில் 270 ரன்களைச் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏழு வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த வெற்றி

இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஏழு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் தொடர்ச்சியாக 17 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 2 பிப் 2018