மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

பாஜக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!

பாஜக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், தமிழகத்திற்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். 2014ஆம் ஆண்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவென்பதையும், அவற்றில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும், பாஜக அரசு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இதில், தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து, நேற்று முதல் தமிழகக் கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இந்த பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு என்று கூறியுள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். இதுபற்றி, அவர் இன்று (பிப்ரவரி 2) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள், ஒக்கி புயல் பேரிடர் நிவாரண நிதி போன்றவை குறித்து பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

“2014 தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் என்ன, இந்த நான்கு வருடத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் என்ன, நிறைவேற்றியது என்ன என்பதையெல்லாம் மத்தியில் உள்ள பாஜக அரசு ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். பாஜக தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டால், வெற்று வாக்குறுதிகளையும் வீண் முழக்கங்களையும் கொடுத்து வாக்காளர்களைத் தொடர்ந்து திசைதிருப்பிவருவது தெளிவாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.

“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் கொடுத்த தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்களில், ஒரு திட்டத்துக்குக்கூட இந்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை. பாஜக அரசு ஏற்கனவே தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு என்று அறிவித்திருந்த எய்ம்ஸ் மருத்துமனை இதுவரை வரவில்லை என்பதும் ஸ்மார்ட் சிட்டிகள் செயல் வடிவம் பெறவில்லை என்பதும் இந்த அறிவிப்புகளின் மீதான நம்பகத்தன்மையை வெகுவாகக் குறைக்கின்றன.

ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்ற அறிவிப்பு, ஏழைக் குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றாலும், ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கான இதுபோன்ற மருத்துவக் காப்பீடுகள், தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது 2009ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன். இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படும் நிதித் தேவைக்காக, நிதி நெருக்கடி நேரத்தில் மாதாந்திர சம்பளம் வாங்குவோரிடம் பிடித்தம் செய்யப்படும் ‘செஸ்’ போலத் தற்போது பிடித்தம் செய்வது தவறான அணுகுமுறை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவோம் என்று கூறியிருக்கும் மத்திய நிதியமைச்சர், கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் பரிதாபநிலை பற்றிப் பரிவுடன் கவனித்து, அவர்களின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யத் தவறிவிட்டதோடு, விவசாயிகளின் முன்னேற்றத்துக்குத் தீர்வு காணாததும் ஏமாற்றமளிக்கிறது என்று தன் அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார். “கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கி, மிகப்பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டிய பலகோடிக்கான வாராகடன் குறித்து, கனத்த மௌனம் காக்கும் மத்திய அரசு, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயப் பெருமக்களை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பது வேதனையளிப்பதோடு, ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் மத்திய அரசின் பாகுபாட்டையும் வெளிக்காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

“மாதாந்திர சம்பளம் பெறுவோருக்கு 40 ஆயிரம் ரூபாய் ‘ஸ்டான்டர்டு டிடெக்சன்’ என்று வருமான வரிச்சலுகை அளித்துவிட்டு, இன்னொரு பக்கம் கொடுத்த சலுகையைத் தட்டிப் பறிப்பதுபோல், மாத சம்பளம் வாங்குவோரின் பயணப்படி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு ஏற்கனவே இருந்த வருமான வரி விலக்கைத் திரும்பப் பெற்றுள்ளது நியாயமற்றது. மக்கள் சேவை செய்ய தேர்வு செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று அறிவித்துவிட்டு, இன்னொரு புறம் மாத சம்பளம் வாங்குவோரிடமிருந்து சுகாதாரம், கல்வி, செஸ் என்று நான்கு சதவீதம் வசூல் செய்வது பாரபட்சமானது” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செய்யும் மருத்துவ செலவுகளுக்கு விதிவிலக்கு என்று அறிவித்துவிட்டு, இன்னொரு புறம் அவர்கள் பரஸ்பர நிதிகளில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புப் பயன்களுக்கும் வரி விதித்திருப்பது, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மன உளைச்சலைத் தரும் செயலாகும். வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயரும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. வீட்டுக்கடன் வட்டி விலக்கு உயரும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்குத் திட்டம் எதுவுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரையிலான நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இயலாமல், பாஜக அரசு போராடிக்கொண்டிருக்கிறது என்பதும் நிதிநிலைச் சீர்திருத்தம் எதையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதும் மத்திய நிதியமைச்சரின் உரையில் எதிரொலித்திருக்கிறது. இரண்டு கோடி பேருக்கு அர்த்தமுள்ள வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, நாட்டின் நிதிப் பற்றாக்குறையை சரி செய்யவோ, இந்திய பொருளாதாரத்தை ஏற்றமிகு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கவோ முனைப்புள்ள திட்டங்கள் ஏதும் தென்படவில்லை” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018