மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

100 நாள் வேலைத் திட்டம் முடங்கும் ஆபத்து!

100 நாள் வேலைத் திட்டம் முடங்கும் ஆபத்து!

மத்திய பட்ஜெட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், 100 நாள் வேலைத் திட்டம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (பிப்ரவரி 2) வெளியிட்ட அறிக்கையில், “ஊரகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.55,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இது அதிகம்தான் என்றாலும் ஊரக மக்களுக்கு ஓரளவுக்கு வேலை வழங்குவதற்குக்கூட இந்த நிதி போதுமானதல்ல என்பதுதான் அனுபவபூர்வ உண்மையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்றாலும் கூட, சராசரியாக 50 நாட்களுக்குக்கூட வேலை வழங்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ள அவர், “இதற்குக் காரணம் நிதிப் பற்றாக்குறைதான். 2018-19ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.55,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும்கூட உண்மை இதுவல்ல. காரணம் இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி பழைய கடன்களை அடைப்பதற்கே செலவாகிவிடும். 2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.48,000 கோடியில் நிலுவைத் தொகையை வழங்கியது போக மீதமுள்ள நிதியைக் கொண்டுதான் புதிய பணிகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. அதனால் ஜனவரி மாத இறுதிவரை ரூ.4786 கோடி ஊதிய நிலுவை சேர்ந்துள்ளது. மீதமுள்ள இரு மாதங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகளுக்கான ஊதியத்தையும் சேர்த்தால் மார்ச் மாத முடிவில் நிலுவைத் தொகை ரூ.15,000 கோடியைத் தாண்டிவிடும். வரும் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இந்த நிலுவைத் தொகையை வழங்கிவிட்டால் மீதமுள்ள ரூ.40,000 கோடியை வைத்துக் கொண்டு ஏழை மக்களுக்கு போதிய அளவில் வேலை வழங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றப் பதிவு செய்துள்ள 12.63 கோடி குடும்பங்களில் 7.21 கோடி குடும்பங்கள் மட்டுமே இத்திட்டப்படி பணி செய்து வருகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “இத்திட்டப்படி ஒரு நாளைக்கு ரூ.241 ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் மீதமுள்ள ரூ.40,000 கோடியைக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 23 நாட்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். தொடர்ச்சியாகப் பணி செய்து வரும் 7.21 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 40 நாட்களாவது வேலை வழங்க வேண்டுமானால் ரூ.69,504 கோடி தேவைப்படும். பழைய நிலுவைத் தொகையையும் கணக்கில் சேர்த்தால் குறைந்தது ரூ.85,000 கோடி தேவைப்படும். இதில் நிர்வாகச் செலவு சேர்க்கப்பட வில்லை. 5% நிர்வாகச் செலவு என்று வைத்துக் கொண்டால் குறைந்தது ரூ.90,000 கோடி தேவை. அவ்வாறு இருக்கும் போது இப்போது ஒதுக்கப்பட்ட தொகையைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018